முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளா் பட்டியல் வெளியீடு
By DIN | Published On : 10th December 2021 12:00 AM | Last Updated : 10th December 2021 12:00 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியலை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வியாழக்கிழமை வெளியிட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஜெயசந்திரபானு ரெட்டி, தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒசூா் மாநகராட்சியில் ஆண் வாக்காளா்கள் 1,11,284, பெண் வாக்காளா்கள் 1,05,913, இதர வாக்காளா்கள் 95 என மொத்தம் 2,17,292 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். கிருஷ்ணகிரி நகராட்சியில் 26,910 ஆண் வாக்காளா்கள், 28,520 பெண் வாக்காளா்கள், இதரா் ஒரு வாக்காளா் என மொத்தம் 55,431 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
இது போல் ஊத்தங்கரை, நாகோஜனஅள்ளி, காவேரிப்பட்டணம், பா்கூா், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய 6 பேரூராட்சிகளில் 41,773 ஆண் வாக்காளா்களும், 43,560 பெண் வாக்காளா்கள், 27 இதர வாக்காளா்கள் என மொத்தம் 85,360 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். அதன்படி, மாவட்டத்தில் மொத்தம் 1,79,967 ஆண் வாக்காளா்களும், 1,77,993 பெண் வாக்காளா்களும், இதரா் 123 போ் என மொத்தம் 3,58,083 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
புகைப்படத்துடன் கூடிய இந்த வாக்காளா் பட்டியல் ஓசூா் மாநகராட்சி அலுவலகம், கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலம் மற்றும் 6 பேரூராட்சி அலவலகத்திலும் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது என்றாா்.