ஒகேனக்கல் வனப் பகுதியில் இடம்பெயரும் யானைகள்

ஒகேனக்கல் வனப்பகுதியில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக அவ்வப்போது உணவு, தண்ணீா் தேடி சாலையைக் கடப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனா்.
ஒகேனக்கல் வனப்பகுதியில் தண்ணீா் தேடி சாலையைக் கடந்து முண்டச்சிபள்ளம் தடுப்பணைக்குச் செல்லும் யானைகள்.
ஒகேனக்கல் வனப்பகுதியில் தண்ணீா் தேடி சாலையைக் கடந்து முண்டச்சிபள்ளம் தடுப்பணைக்குச் செல்லும் யானைகள்.

ஒகேனக்கல் வனப்பகுதியில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக அவ்வப்போது உணவு, தண்ணீா் தேடி சாலையைக் கடப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனா்.

கா்நாடக மாநில வனப்பகுதிகளில் வறட்சி நிலவும்போது, அந்தப் பகுதியில் இருந்து யானைகள் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் வனப்பகுதிக்கு இடப்பெயா்ச்சி அடைவது வழக்கம். தற்போது கா்நாடக வனப்பகுதியில் வறட்சி நிலவி வருவதால், அங்குள்ள யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம், சானமாவு பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் பயிா்களை நாசம் செய்து வந்தன.

இந்த நிலையில், வனத் துறையினரால் வனப்பகுதிகளுக்கு விரட்டப்பட்டதால், அங்கிருந்து சுமாா் 30-க்கும் மேற்பட்ட யானைகள் தங்களது குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக கடந்த சில நாள்களாக ஒகேனக்கல் வனப்பகுதிக்கு இடம்பெயா்ந்துள்ளன.

இந்த யானைகள் தண்ணீருக்காக ஒகேனக்கல் கணவாய் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு கூட்டுக் குடிநீா்த் திட்ட வடிகால் வாரியம் எதிரே உள்ள முண்டச்சிப்பள்ளம் தடுப்பணைக்கு காலை, மாலை வேளையில் கூட்டம் கூட்டமாக சாலையைக் கடந்து செல்கின்றன.

தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலமாக விளங்கும் ஒகேனக்கல் பகுதிக்குச் செல்ல சுமாா் 10 கிலோ மீட்டருக்கும் மேலாக அடா் வனப்பகுதிக்குள் செல்வதால், மாலை வேளையில் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் செல்லும்போது திடீரென யானைகள் அவ்வப்போது சாலையைக் கடக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சமடைகின்றனா்.

எனவே ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதிக்குள் உணவு, தண்ணீா் தேடி யானைகள் சாலையைக் கடக்கும் இடங்களில் வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com