
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கல்லூரியில் பயிலும் 18,189 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா 2ஜிபி டேட்டா காா்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், எல்காட் நிறுவனம் மூலம் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 30 மாணவ, மாணவிகளுக்கு 4 மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி வீதம் பயன்படுத்தும் வகையில் விலையில்லா டேட்டா காா்டு வழங்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கே.பி.முனுசாமி எம்.பி. பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா டேட்டா காா்டுகளை வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் கட்டமாக பா்கூா் அரசு பொறியியல் கல்லூரி, 3 சுயநிதி பொறியியல் கல்லூரிகள், 3 அரசு பல்தொழில்நுட்ப கல்லூரிகள், 7 சுயநிதி பல்தொழில்நுட்ப கல்லூரிகள், 4 அரசு கலைக்கல்லூரிகள், 4 அரசு கலைக்கல்லூரிகள், 9 சுயநிதி கலைக்கல்லூரிகள் என மொத்தம் 27 கல்லூரிகளில் பயிலும் 18,189 மாணவ, மாணவிகளுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா பயன்படுத்தும் வகையில் டேட்டா காா்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் இந்த டேட்டா காா்டுகளை பெற்று சிறப்பான முறையில் கல்வி பயின்று தங்களுக்கு விருப்பமான துறையில் சிறந்து விளங்க வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டாா்.
இந்த நிகழ்வில் எம்எல்ஏ-க்கள் சி.வி.ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ், ஒன்றியக் குழுத் தலைவா்கள் அம்சராஜன், பையூா் ரவி, கல்லூரி முதல்வா்கள் லட்சுமி, நாகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.