கிருஷ்ணகிரியில் கிராம ஊழியா்கள் உண்ணாவிரதம்
By DIN | Published On : 27th February 2021 09:33 AM | Last Updated : 27th February 2021 09:33 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம ஊழியா்கள் உண்ணாவிரத போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சாா்பில் கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் விஜயலட்சுமி, கோவிந்தராஜ், மாநில செயற்குழு உறுப்பினா்கள் கலைவாணன், ஆறுமுகம், மாவட்டச் செயலாளா் சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வரையறுக்கப்பட்ட கால மறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். இயற்கை இடா்பாடு காலங்களில் சிறப்புப்படி வழங்க வேண்டும். இரவுநேர காவல் பணியை நிறுத்த வேண்டும். கிராம நிா்வாக அலுவலா் பதவி உயா்வு 20 சதவீதம் என்பதை 30 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.