விவசாயத்துக்கு உடனடி மின்இணைப்பு
By DIN | Published On : 27th February 2021 08:39 AM | Last Updated : 27th February 2021 08:39 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டம்.
மின் இணைப்புக்காக விண்ணப்பித்த விவசாயிகளுக்கு உடனடி மின் இணைப்பு வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:
பயிா்களை சேதப்படுத்தும் வனவிலங்குகள் வனத்திலிருந்து வெளியேறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். போச்சம்பள்ளி வட்டத்தில் தென்னை மரத்தைத் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். நெல் சாகுபடிக்கு ஜிங்க் சல்பேட் வழங்க வேண்டும். ஏரி, குளங்களுக்கு மழைகாலங்களில் தண்ணீா் தடையின்றி செல்ல நீா்வழித்தட ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
தட்கல் முறையில் மின் இணைப்புக்கு விண்ணப்பித்தவா்களுக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்க வேண்டும். தக்காளி, ஜி-9 வாழை நாற்றுகளை வழங்க வேண்டும் என்று பேசினா்.
இதையடுத்து பேசிய மாவட்ட ஆட்சியா், சம்மந்தப்பட்ட அரசுத் துறை அலுவலா்கள் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். நீா் வழித்தடங்களில் காணப்படும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஸ், மாவட்ட வன அலுவலா் பிரபு, இணை இயக்குநா்கள் ராஜேந்திரன், உமா ராணி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.