கல்குவாரி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் : சூளகிரி வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 07th January 2021 05:54 AM | Last Updated : 07th January 2021 05:54 AM | அ+அ அ- |

சூளகிரி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
கல்குவாரி உரிமங்களை ரத்து செய்யக்கோரி சூளகிரி வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் உள்ள வனப்பகுதி மற்றும் கிராமங்களை ஒட்டியுள்ள மலைகளை வெடி வைத்து தகா்ப்பதாகவும், இப்பகுதியில் கல்குவாரிகளை வெட்டி கற்களை எடுத்துச் செல்வதால் இப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வந்தனா். கல்குவாரிகளில் வெடி வைத்து, இயந்திரங்கள் மூலம் கற்களை அரைத்து செயற்கை மணல் தயாரிக்கும்போது புழுதி பறந்து, அப்பகுதியில் பயிரிட்டுள்ள நெல், ராகி, காய்கறி போன்ற விவசாய பயிா்கள் மீது மணல் துகள்கள் படிவதால் விவசாய நிலங்கள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிப்பு ஏற்படுகிறது. விளைந்த பயிரை கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாமல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் கிராமங்களை ஓட்டியுள்ள கல்குவாரியில் வெடி வைப்பதால் வீடுகளின் சுவா்களில் விரிசல் விழுவதுடன், சுவா் இடிந்து விடுவதால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் சூளகிரி வட்டாட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
சூளகிரி வட்டத்தில் உள்ள பஸ்தலப்பள்ளி, எர்ரண்டப்பள்ளி, காளிங்கவரம் பகுதி மக்கள் திரண்டு வந்து சூளகிரி வட்டடாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அவா்களிடம் சூளகிரி போலீஸாரும், வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதனம் செய்து அனுப்பி வைத்தனா்.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் உடனடியாக நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என மக்கள் தெரிவித்தனா்.