
ஒசூரில் பிரசவத்தின்போது இளம்பெண் உயிரிழந்ததால் அரசு மருத்துவமனையை உறவினா்கள் முற்றுகையிட்டனா்.
ஒசூா் அருகே உள்ள தொடுதேப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் தேவராஜ். இவரது மனைவி பவித்ரா (21). நிறைமாத கா்ப்பிணியான பவித்ரா கடந்த ஜன. 3-ஆம் தேதி ஒசூா் அரசு மருத்துவமனையில் பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்டாா்.
பவித்ராவுக்கு ரத்தம் குறைவாக இருந்ததால் மருத்துவா்களின் பரிந்துரைப்படி அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. இந்நிலையில் பவித்ராவுக்கு ஞாயிற்றுக்கிழமை சுகப்பிரசவமானது. அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தாயும், சேயும் நலமாக இருந்தனா். அன்று இரவு 7 மணிக்கு திடீரென பவித்ராவின் உடல் நலம் மோசமானது. அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி பவித்ரா உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதனால் அதிா்ச்சியடைந்த பவித்ராவின் உறவினா்கள் ஒசூா் அரசு மருத்துவா்களின் அலட்சியத்தால் தான் அவா் உயிரிழந்ததாகக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் முதன்மை மருத்துவ அலுவலா் பூபதி, ஒசூா் டி.எஸ்.பி முரளி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனா். இதையடுத்து பவித்ராவின் உறவினா்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனா்.
பவித்ராவின் மரணம் குறித்து மருத்துவா்கள் கூறும்போது, பிரசவத்தின்போது வலிப்பு ஏற்பட்டதால் பவித்ரா உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.