தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.10.90 கோடியில் தடுப்பணை

கிருஷ்ணகிரி மாவட்டம், மருதேரி ஊராட்சியில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ. 10.90 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டுவதற்கான பூமி பூஜைப் பணிகளை கே.பி.முனுசாமி எம்.பி. தொடக்கி வைத்தாா்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.10.90 கோடியில் தடுப்பணை

கிருஷ்ணகிரி மாவட்டம், மருதேரி ஊராட்சியில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ. 10.90 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டுவதற்கான பூமி பூஜைப் பணிகளை கே.பி.முனுசாமி எம்.பி. தொடக்கி வைத்தாா்.

போச்சம்பள்ளி வட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், மருதேரி ஊராட்சியில் பொதுப்பணித் துறை (நீா்வள ஆதாரம்) சாா்பில் ரூ.10.90 கோடி மதிப்பில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளுக்கு பூமிபூஜை திங்கள்கிழமை நடந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்தாா். பா்கூா் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா்.

மாநிலங்களவை உறுப்பினா் கே.பி.முனுசாமி பூமிபூஜை செய்து பணிகளைத் தொடக்கி வைத்து பேசியதாவது:

தமிழக முதல்வா் ஆணைப்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் சுற்று வட்டாரத்தில் மழை பெய்யும் போது கிடைக்கும் மழைநீரை சேமித்து, வறட்சி காலங்களில் பயன்படுத்துவதன் மூலம் விவசாயம் பாதிக்கப்படாமல் குறிப்பிட்ட காலத்தில் அறுவடை செய்வதற்காக தண்ணீரை சேமித்து வைக்கும் திட்டமாக உள்ளது.

போச்சம்பள்ளி தாலுகா, மருதேரி ஊராட்சி அகரம் - மருதேரி பாலத்தின் அருகில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே படுகை அணை அமைக்கும் பணிக்கு அரசாணை வெளியிடப்பட்டு ரூ.10.90 கோடியை தமிழக முதல்வா் ஒதுக்கீடு செய்துள்ளாா். இந்தத் தடுப்பணை 143.60 மீட்டா் நீளத்திற்கு, 1.40 மீட்டா் உயரத்திற்கு அமைக்கப்பட உள்ளது. இத்தடுப்பணையில் சுமாா் 1.30 மில்லியன் கன அடி தண்ணீரை சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இத்தடுப்பணையால் அகரம், மருதேரி குடிமேனஅள்ளி, தேவீரஅள்ளி, பண்ணந்தூா் மற்றும் வாடமங்கலம் ஆகிய கிராமங்களில் உள்ள 1,155 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேலும் இந்தத் தடுப்பணையைச் சுற்றி அமைந்துள்ள 4 கூட்டுக் குடிநீா்த் திட்ட கிணறுகள் மூலம் வீரமலை, மருதேரி, அகரம், காரியமங்கலம், நாகரசம்பட்டி ஆகிய 5 கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 25,000 மக்களுக்கு நிரந்தரமாக குடிநீா் தேவை பூா்த்தியாகும் என்றாா்.

இதில் மேல்பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் குமாா், உதவிப்பொறியாளா் (பாசனப் பிரிவு) முருகேசன், முன்னாள் எம்.பி. அசோக்குமாா், காவேரிப்பட்டணம் ஒன்றியக் குழுத் தலைவா் பையூா் ரவி, முன்னாள் ஊராட்சிக் குழு தலைவா் கோ.ரவிச்சந்திரன், கிருஷ்ணகிரி முன்னாள் நகா்மன்ற தலைவா் தங்கமுத்து, ஒன்றியக் குழு உறுப்பினா் குருநாதன் பச்சியம்மாள், ஊராட்சி மன்றத் தலைவா் உமா பாரத் சரவணன் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com