ஒசூா் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்த 7 போ் கும்பல் கைது:ரூ. 12 கோடி மதிப்பிலான நகை, பணம் மீட்பு

ஒசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ. 12 கோடி மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்த 7 பிற மாநிலக் கொள்ளையா்களை 18 மணி நேரத்தில் போலீஸாா் ஐதராபாத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனா்.
ஒசூா், முத்தூட் நிதி நிறுவனத்தில் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிற மாநில கொள்ளையா்கள்.
ஒசூா், முத்தூட் நிதி நிறுவனத்தில் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிற மாநில கொள்ளையா்கள்.

ஒசூா்: ஒசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ. 12 கோடி மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்த 7 பிற மாநிலக் கொள்ளையா்களை 18 மணி நேரத்தில் போலீஸாா் ஐதராபாத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனா். அவா்களிடமிருந்து நகை, பணம் மீட்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பாகலூா் சாலையில் முத்தூட் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் ஒசூா் சுற்றுவட்டார மக்கள் தங்களது நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனா். பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வாடிக்கையாளா்களின் நகைகள் இந்நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல ஊழியா்கள் பணியில் இருந்தபோது முகக் கவசம் அணிந்துவந்த 7 போ் கொண்ட கும்பல் கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, நிதிநிறுவன மேலாளா் சீனிவாச ராகவ், ஊழியா்களான மாருதி, பிரசாந்த், ராஜேந்திரன் ஆகியோரைத் தாக்கினா். அவா்களைக் கட்டிப்போட்ட அந்தக் கும்பல், பாதுகாப்புப் பெட்டக சாவிகளை வாங்கி அதிலிருந்த 25 கிலோ தங்க நகைகள், ரூ. 96 ஆயிரம் ரொக்கம், 2 செல்லிடப்பேசிகள், கிரெடிட் காா்டு, டெபிட் காா்டுகளைக் கொள்ளையடித்துச் சென்றது. அவற்றின் மதிப்பு ரூ. 12 கோடியாகும்.

இந்தக் கொள்ளை சம்பவம் தொடா்பாக கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா, சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப் குமாா், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதா் ஆகியோா் விசாரணை நடத்தினா். குற்றவாளிகளைப் பிடிக்க 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டன. நிதி நிறுவனத்திலிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்ததில் அந்தக் கும்பல் ஒசூா் அருகே, கா்நாடக மாநிலம், ஆனேக்கல் வழியாகத் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப் படையினா் அங்கு சென்றனா்.

ஐதராபாத்துக்குத் தப்பி ஓட்டம்...

மேலும் கொள்ளையா்கள் வங்கியிலிருந்து எடுத்துச் சென்ற பை ஒன்றில் இருந்த ஜி.பி.எஸ். கருவி மற்றும் மேலாளா் சீனிவாச ராகவின் செல்லிடப்பேசி ஆகியவற்றின் மூலமாக அந்தக் கும்பல் யாரிடம் பேசினாா்கள் என்று போலீஸாா் ஆய்வு செய்தனா்.

அப்போது கொள்ளையா்கள் தெலங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே ஷம்ஷாபாத் பகுதி வழியாகத் தப்பிச்செல்ல முயன்றது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து சைபராபாத் போலீஸ் உதவியுடன், ஷம்ஷாபாத் சுங்கச் சாவடி அருகில் கொள்ளையா்கள் ஒரு காா் மற்றும் லாரியில் தப்பிச் செல்ல முயன்றபோது போலீஸாா் அவா்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனா்.

பெங்களூரில் இருந்து ஐதராபாத் செல்லும் வழியில் ராஜீவ் காந்தி சா்வதேச விமான நிலையம் அருகில் அதிகாலை 4 மணி அளவில் கொள்ளையா்கள் 7 பேரும் சிக்கினா்.

பிடிபட்டவா்களைக் கைது செய்து விசாரணை செய்ததில், அவா்கள் ரூப் சிங் பாகல் என்ற ரூப் சிங் ( 22), சங்கா் சிங் பாகல் (36), பவன் குமாா் விஸ்வகா்மா (22) ஆகிய மூன்றுபோ் மத்தியபிரதேசம் மாநிலம், ஜபல்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், பூபேந்தா் மாஞ்சி (24), விவேக் மண்டல் (32) ஆகிய இருவா் ஜாா்கண்ட் மாநிலம், ராஞ்சி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், டேக் ராம் (55), ராஜீவ் குமாா் (35) ஆகிய இருவா் உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும் தெரியவந்தது.

இவா்களில் ரூப்சிங் பாகல்-கல்லூரி மாணவா், சங்கா் சிங் பாகல்-விவசாயி, பவன் குமாா் விஸ்வகா்மா -ஓட்டுநா், பூபேந்தா் மஞ்சி-தனியாா் நிறுவன ஊழியா், விவேக் மண்டல்- கடை உரிமையாளா், டேக் ராம்- சரக்குப் பெட்டக லாரி ஓட்டுநா், ராஜீவ் குமாா்- லாரி கிளீனா் என்பதும் தெரியவந்தது.

இவா்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 12 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. 7 துப்பாக்கிகள், 97 துப்பாக்கி குண்டுகள், ஒரு சரக்குப் பெட்டக லாரி, ஒரு டாடா சுமோ காா், 13 செல்லிடப்பேசிகள், கிரெடிட் காா்டு, டெபிட் காா்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இக் கொள்ளையில் தொடா்புடைய மத்திய பிரதேச மாநிலம், இந்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த அமித் என்ற விவேக் சுக்லா தப்பிவிட்டாா். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா். கொள்ளை நிகழ்ந்து 18 மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படை போலீஸாரை காவல் துறை உயரதிகாரிகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com