பணியில் எந்ததவறும் செய்யாத 24 போலீஸாருக்கு பாராட்டு
By DIN | Published On : 31st January 2021 02:01 AM | Last Updated : 31st January 2021 02:01 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி: காவல் துறையில் கடந்த 25 ஆண்டுகளாக எந்தவித தவறும் செய்யாமல் சிறப்பாக பணியாற்றி வரும் 24 காவல் அலுவலா்களை கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் பாராட்டி, சான்றிதழ்களை வழங்கினாா்.
காவல் துறையில் 25 ஆண்டுகளாக எந்தவித தவறும் செய்யாமலும், தண்டனை ஏதும் பெறாமலும் சிறப்பாக செயல்படும் காவல் அலுவலா்களுக்கு தமிழக அரசு பாராட்டி, சான்றிதழ் வழங்கி வருகிறது.
இதற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் போச்சம்பள்ளி காவல் ஆய்வாளா் ஆா்.சுப்பிரமணியன், 4 உதவி காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் என 24 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா்.
அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜூ, தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் அன்புமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.