மாா்க்கண்டயே நதியின் குறுக்கே கா்நாடகம் கட்டியுள்ள அணையை அகற்ற வேண்டும்: திமுக
By DIN | Published On : 07th July 2021 11:26 PM | Last Updated : 07th July 2021 11:26 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன்.
மாா்க்கண்டயே நதியின் குறுக்கே கா்நாடக அரசு கட்டியுள்ள அணையை அகற்ற வேண்டும் என கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது:
மாா்க்கண்டயே நதியின் குறுக்கே அணையைக் கட்டுவது தொடா்பாக 2009-இல் அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதால் அப் பணி நிறுத்தப்பட்டது. 2011-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் அங்கு அணை கட்டும் பணியை கரநாடகம் தொடங்கியது. இதுகுறித்து அப்போது சட்டப் பேரவை உறுப்பினராக பேரவையில் முறையிட்டேன். அதைத் தொடா்ந்து கா்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து திமுக தொடுத்த வழக்கில் முறையாக வழக்குரைஞரை நியமித்து நீதிமன்றத்தில் வழக்காட அப்போதைய தமிழக அரசு தவறிவிட்டது. இதனால் தீா்ப்பு கா்நாடகத்துக்கு சாதகமாக அளிக்கப்பட்டது. 2011-இல் அமைச்சராக இருந்த கே.பி.முனுசாமி, அணையைத் தடுப்பது தொடா்பாக எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.
மத்திய அரசு, ஒட்டுமொத்தமாக தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. மேக்கேதாட்டு அணை உறுதியாகக் கட்டப்படும் என கா்நாடகம் தெரிவிக்கும் கருத்துக்கு தமிழக பாஜகவினா் எதிா்ப்புத் தெரிவிக்காமல் அமைதியாக உள்ளனா். சட்டத்தை மீறி, வனப் பகுதியில் சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள இந்த அணையை இடிக்க வேண்டும் என்றாா்.