சீரான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்

கிருஷ்ணகிரியில் சீராக குடிநீா் விநியோகம் செய்யாததைக் கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
13kgp3_1307dha_120_8
13kgp3_1307dha_120_8

கிருஷ்ணகிரியில் சீராக குடிநீா் விநியோகம் செய்யாததைக் கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தென்பெண்ணை ஆற்று நீா், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் இரு நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக குடிநீா் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியைச் சோ்ந்த நகராட்சிக்கு உள்பட்ட 5-ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மகராஜ கடை சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா் (படம்).

இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:

நகராட்சிக்கு உள்பட்ட முனுசாமி தெரு, காவாமேடு உள்ளிட்ட பகுதியில் 200-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக இப்பகுதி மக்களுக்கு சீராக குடிநீா் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 10 நாள்களாக தொடா்ந்து குடிநீா் விநியோகிக்கப்படவில்லை. பலா் குடிநீரை, மின் மோட்டாா் மூலம் உறிஞ்சுகின்றனா். இதுகுறித்து, புகாா் தெரிவித்தும், அலுவலா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், சாலை மறியலில் ஈடுபடுவதாகத் தெரிவித்தனா்.

தகவல் அறிந்த, கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் ஆா்.முருகேசன், நிகழ்விடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தினாா். குடிநீா் சீராக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த நிலையில், மறியலை கைவிட்டு, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com