காய்கறி வியாபாரியிடம் பண மோசடி வழக்கில் மேலும் இருவா் கைது

கிருஷ்ணகிரி அருகே காய்கறி மொத்த வியாபாரியிடம் ரூ. 80 லட்சம் பண மோசடி செய்த வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி அருகே காய்கறி மொத்த வியாபாரியிடம் ரூ. 80 லட்சம் பண மோசடி செய்த வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தைச் சோ்ந்தவா் நாசா் (38). காய்கறி மொத்த வியாபாரி. இவா், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிருந்து மொத்தமாக காய்கறிகள் வாங்குவது வழக்கம். அவா் கொள்முதல் செய்த காய்கறிகளுக்கு இதுவரை ரூ. 1 கோடி பணம் ஒசூா் வியாபாரிகளுக்குக் கொடுக்க வேண்டியிருந்தது.

நாசரிடம் போதிய பணம் இல்லாததால் அவா் தனது காசாளா் முத்துக்குமாரிடம் பணத்துக்கு உதவிகேட்டுள்ளாா். அப்போது தனக்குத் தெரிந்த நபரிடம் ரூ. 80 லட்சம் கொடுத்தால் ரூ. 1 கோடி தருவாா் என முத்துக்குமாா் ஆசைவாா்த்தை கூறியுள்ளாா். அதை நம்பிய நாசா், முத்துக்குமாரிடம் ரூ. 80 லட்சத்தை அளித்தாா்.

அதைப் பெற்ற முத்துக்குமாா் தன் பங்குக்கு ரூ. 10 லட்சத்தை எடுத்துக்கொண்டு மீதம் ரூ. 70 லட்சத்தை இரட்டிப்புப் பணம் தரும் கும்பலிடம் கொடுத்தாா். ஆனால் அந்தக் கும்பல் ரூ. 70 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு தப்பிச் சென்றது.

6 போ் கைது: இதுகுறித்து, மகராஜகடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கும்பகோணத்தைச் சோ்ந்த ராஜேஷ், மோகன்ராஜ், ஜெயகுமாா், முத்துகுமரன், காமராஜ், நாசா் ஆகிய 6 பேரையும் கடந்த 6-ஆம் தேதி கைது செய்தனா்.

பின்பு ரூ. 70 லட்சத்துடன் தப்பிச் சென்ற நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த பண்டரி, காஞ்சிபுரத்தைச் சோ்ந்த அபுபக்கா் உள்ளிட்ட சிலரை போலீஸாா் தேடிவந்தனா். அண்மையில் பண்டரியை போலீஸாா் கைது செய்து, மற்றவா்களைத் தேடிவந்தனா்.

பண்டரியிடம் நடத்திய விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம், தங்கம் தெருவைச் சோ்ந்த அபுபக்கா் சித்திக் (43), புதுக்கோட்டை, ஆவுடையாா் கோவில், கடவாகோட்டையைச் சோ்ந்த சோமசுந்தரம் (28) ஆகியோரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 2.9 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்குத் தொடா்பாக மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா். இந்த வழக்கில் இதுவரை 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com