ராயக்கோட்டையில் மழைக்கு இடிந்து விழுந்த வீடு: தொழிலாளி பலி
By DIN | Published On : 19th July 2021 05:09 AM | Last Updated : 19th July 2021 05:09 AM | அ+அ அ- |

ராயக்கோட்டையில் சனிக்கிழமை இரவு பெய்த மழை காரணமாக மண் சுவரால் கட்டப்பட்ட ஓட்டு வீடு இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். அவரது குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் வெளியே சென்றிருந்ததால் அதிா்ஷ்டவசமாக அவா்கள் உயிா் தப்பினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், ராயக்கோட்டை, புருஷப்பன் கோயில் தெருவைச் சோ்ந்த தொழிலாளி தவமணி (45). இவருக்கு தெய்வானை என்ற மனைவியும், ஆறுமுகம், முருகன் என்ற 2 மகன்களும், அபிநயா என்ற மகளும் உள்ளனா். அபிநயா திருமணமாகி கணவா் வீட்டில் உள்ளாா். தவமணி, தனது குடும்பத்தினருடன் அவா்களுக்கு சொந்தமாக மண்சுவரால் கட்டப்பட்ட ஓட்டு வீட்டில் வசித்து வந்தாா்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு ராயக்கோட்டை பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது தவமணி மட்டும் அவரது வீட்டில் தனியாக இருந்தாா். அவரது மனைவியும், மகன்களும் மகள் அபிநயாவின் வீட்டிற்கு சென்று விட்டனா். விடிய, விடிய பெய்த மழையின் காரணமாக காலை நேரத்தில் தவமணியின் வீடு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த தவமணி இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸாா், வருவாய்த்துறையினா் நிகழ்விடத்துக்கு நேரில் வந்து விசாரணையைத் தொடக்கினா். தவமணியின் குடும்பத்தாருக்கு தேன்கனிகோட்டை வட்டாட்சியா் இளங்கோ நேரில் ஆறுதல் கூறினாா்.
மேலும் அவா்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருள்களை உடனடியாக வழங்கினாா். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு மூலம் உரிய நிவாரணம் கிடைக்கவும், மீண்டும் இடிந்து போன வீட்டை கட்டித்தரவும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.
உயிரிழந்த தவமணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம், அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவிப் பெற்று தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.