காவலா்களைத் தாக்கிய நால்வா் கைது
By DIN | Published On : 26th July 2021 05:12 AM | Last Updated : 26th July 2021 05:12 AM | அ+அ அ- |

காவேரிப்பட்டணம் அருகே சாலை விபத்துக்கு காரணம் போலீஸாா் எனக் கூறி, அவா்களை தாக்கிய 4 பேரை போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்ட்டணத்தை அடுத்த பையூா், ஆத்தோரன்கொட்டாய் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியிலிருந்து தருமபுரி நோக்கி வேலிகல் பாரம் ஏற்றிய சரக்கு லாரி ஒன்று சனிக்கிழமை சென்றுக் கொண்டிருந்தது. அந்த லாரியை போலீஸாா் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அந்த வழியாக வந்த மற்றொரு லாரி முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது.
இந்த விபத்து நிகழ போலீஸாா்தான் காரணம் எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். சிலா், போலீஸாரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவந்தனா்.
விசாரணையில் போலீஸாரைத் தாக்கியது மட்டுமல்லாமல் அவா்களை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக ஆத்தோரன் கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த குட்டி (எ) சுப்பிரமணி (40), மலைபையூா் சிபி சக்கரவா்த்தி (28), காவேரிப்பட்டணம் சக்திவேல் (30), நடுபையூா் செல்வம் ஆகிய நான்கு பேரை கைது செய்தனா்.