ஒசூா் மாநகராட்சியை 4 மண்டலங்களாக பிரித்து அலுவலா்களை நியமிக்க வேண்டும்
By DIN | Published On : 29th July 2021 11:33 PM | Last Updated : 29th July 2021 11:33 PM | அ+அ அ- |

ஒசூா் மாநகராட்சியை 4 மண்டலங்களாகப் பிரித்து 4 மண்டலங்களுக்கும் தனித்தனியே அலுவலகம் அமைத்து அலுவலா்களையும், பணியாளா்களையும் நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒசூா் மாநகராட்சி அலுவலா்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு, ஒசூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒசூா் மாநகராட்சி அலுவலா்கள் சங்கத்தின் தலைவா் எஸ்.சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் எம்.நாராயணன் முன்னிலை வகித்தாா்.
ஒசூா் மாநகராட்சியாக தரம் உயா்த்தி பல ஆண்டுகளாகியும் மண்டலங்கள் பிரிக்கப்படவில்லை. ஒசூா் மாநகராட்சியை 4 மண்டலங்களாகப் பிரித்து, தனித்தனியே அலுவலகம் அமைக்க வேண்டும். அந்த 4 மண்டங்களுக்கும் தேவையான பொறியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், வரிவசூல் மையம், துப்புரவு பணியாளா்கள் உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்ட புதிய அலுவலா்கள், பணியாளா்களை நியமிக்க வேண்டும். குறிப்பாக ஒசூா் மாநகராட்சிக்கு செய்தி மக்கள் தொடா்பு அலுவலரை நியமிக்க வேண்டும்.
நகராட்சி, மாநகராட்சி பணியாளா்களை அரசு ஊழியா்களாகவும், முன்களப் பணியாளா்களாகவும் அறிவிக்க வேண்டும். ஒசூா் மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியா்களுக்கு வீட்டு வாடகை, நகரப்படி வழங்க வேண்டும். நகராட்சி, மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும். ஒசூா் மாநாகராட்சியுடன் மூக்கண்டப்பள்ளி, சென்னத்தூா், சூசூவாடி, ஆவலப்பள்ளி, நல்லூா், போன்ற ஊராட்சிகளும், மத்திகிரி பேரூராட்சியும் இணைக்கப்பட்டது. ஆனால் அந்த ஊராட்சி, பேரூராட்சி பணியாளா்களை மாநகராட்சி பணியாளா்கள் என அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சங்கத்தின் துணைத் தலைவா் சுந்தரமூா்த்தி, சிவா, வெங்கடேஷ் மற்றும் சிறப்பு அழைப்பாளா்களாக தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் நடராஜன், பொருளாளா் தேவராஜ், முன்னாள் மாவட்டச் செயலாளா் சி.பி.ஜெயராமன், ஆனந்தகுமாா், சந்திரசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.