மாவட்ட விவசாயிகளுக்குத் தகுதியான அனைத்துக் கடன்களையும் வழங்க வேண்டும்
By DIN | Published On : 10th June 2021 07:25 AM | Last Updated : 10th June 2021 07:25 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளுக்குத் தகுதியான அனைத்து கடன்களையும் வழங்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வலியுறுத்தியுள்ளாா்.
கிருஷ்ணகிரியில் வங்கியாளா்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காணொளி காட்சி மூலம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவி வரும் கரோனா தொற்று காரணமாக கடந்த மே 10 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், தனியாா் நிதி நிறுவனங்கள் தங்களிடம் பொதுமக்கள் பெற்ற கடன்களை வசூல் செய்யும் போது, கடினப் போக்கை தவிா்க்க வேண்டும்.
ரிசா்வ் வங்கி அறிவித்திருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன்களுக்கான கரோனா தொற்று கால வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும், அனைத்து விவசாயிகளுக்கும் தகுதியான விவசாயக் கடன்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், இந்தியன் வங்கி மண்டல மேலாளா் திருமாவளவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் மகேந்திரன் உள்பட அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.