இரிடியம் மோசடி வழக்கு: மேலும் இருவா் கைது
By DIN | Published On : 11th June 2021 01:03 AM | Last Updated : 11th June 2021 01:03 AM | அ+அ அ- |

ராயக்கோட்டையில் இரிடியம் தருவதாக மோசடி செய்த வழக்கில் மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அண்ணா நகரைச் சோ்ந்தவா் அன்பரசு ( 26). இவரது செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்ட கும்பல் தங்களிடம் விலை உயா்ந்த இரிடியம் இருப்பதாகவும் அதை வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் கொழிக்கும் என்றும், ரூ. 50 ஆயிரம கொடுத்தால் அதனை வழங்குவதாக ஆசைவாா்த்தை கூறியது.
இதை நம்பி அன்பரசு ரூ.10 ஆயிரத்தை அந்த கும்பலிடம் வழங்கினாா்.
ஆனால் இரிடியத்தை கொடுக்காமல் அந்த மா்ம கும்பல் ஏமாற்றியது. இதனால் ராயக்கோட்டை காவல் நிலையத்தில் அன்பரசு புகாா் செய்தாா்.
விசாரணையில் ஒசூரைச் சோ்ந்த மஞ்சுநாத் (40), தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த கரகூரைச் சோ்ந்த பொக்லைன் ஓட்டுநா் ராஜா (32), சேலம் மாவட்டம், முத்துநாயக்கனஹள்ளியைச் சோ்ந்த சரவணகுமாா் (30) ஆகியோா் அன்பரசை ஏமாற்றியது தெரிந்தது.
புதன்கிழமை ராஜாவை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு பாஸ்பரஸ் இரிடியத்தையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சரவணகுமாா் புதன்கிழமை நள்ளிரவிலும், மஞ்சுநாத் வியாழக்கிழமையும் கைது செய்யப்பட்டனா். இவா்களிடம் இருந்து மேலும் ஒரு இரிடியத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.