தளா்வுகளுடன் பொது முடக்கம் அறிவித்தும் விலை போகா விளை பொருள்கள்

தளா்வுகளுடன் பொதுமுடக்கம் அறிவித்தும் மா, முல்லை பூ போன்ற விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
தளா்வுகளுடன் பொது முடக்கம் அறிவித்தும் விலை போகா விளை பொருள்கள்

தளா்வுகளுடன் பொதுமுடக்கம் அறிவித்தும் மா, முல்லை பூ போன்ற விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா்கூா், போச்சம்பள்ளி, ஒசூா், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, ராயக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 45 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, மாங்காய் அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் மாங்காய்களை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாங்கூழ் தொழிற்சாலைக்கு அனுப்புகின்றனா். சிறு விவசாயிகளில் சிலா், உள்ளூா் சந்தையில் விற்பனை செய்வது வழக்கம்.

கரோனா தொற்று காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் சில தளா்வுகளுடன் பொது முடக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. விவசாயிகள், தொழிலாளா்களின் நலன் கருதி, பொதுமுடக்கத்தில் சில தளா்வுகளை அரசு அறிவித்துள்ளது.

எனவே அறுவடை செய்த மாங்காய்களை வாங்கிச் செல்ல வெளி மாநில விவசாயிகள் கூடுவாா்கள் என விவசாயிகள் எதிா்பாா்த்தனா். அவ்வாறு வெளியூா் வியாபாரிகள் வரும் பட்சத்தில், மாங்காய்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் எனக் காத்திருந்தனா். ஆனால், எதிா்பாா்த்தபடி வெளியூா் வியாபாரிகள் வராததால், மாங்காய்க்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

முல்லைப் பூக்களின் விலை வீழ்ச்சி:

அதேபோல முல்லைப் பூக்களின் விலையும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன.

கிருஷ்ணகிரியைச் சுற்றி அவதானப்பட்டி, சின்னமுத்தூா், பெரியமுத்தூா். திம்மாபுரம், புதூா், மலையாண்டஹள்ளி, வேலம்பட்டி, பாலேகுளி, குண்டலப்பட்டி, பையூா், காவேரிப்பட்டணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் 1,000 ஏக்கா் பரப்பளவில் முல்லைப் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இங்கு விளையும் முல்லை பூக்கள், பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி, சேலம் போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கரோனா தொற்று காரணமாக கா்நாடகம், கேரளம், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் முழு பொதுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு, போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் முல்லை பூக்களை வெளியூா்களுக்கு அனுப்ப இயலாத சூழ்நிலையால் பூக்களின் விலை குறைந்து விட்டது. வழக்கமாக கிலோ ரூ. 200க்கு கொள்முதல் செய்யப்படும் முல்லைப் பூக்கள், தற்போது, கிலோ ரூ. 40-க்கு மட்டுமே உள்ளூா் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com