மத்தூா் மின்வாரிய அலுவலகத்தில்ரூ. 2.80 கோடி கையாடல்

மத்தூா் மின்வாரிய அலுவலகத்தில் ரூ. 2. 80 கோடி கையாடல் செய்யப்பட்டது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

மத்தூா் மின்வாரிய அலுவலகத்தில் ரூ. 2. 80 கோடி கையாடல் செய்யப்பட்டது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் மின்வாரிய அலுவலகத்தில் மின்சார சேவைக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு வசூலிக்கும் பணத்தை, முகவா்கள் மூலம் வங்கியில் செலுத்துவது வழக்கம். இந்த நிலையில், மத்தூா் மின்வாரிய அலுவலகத்தில் கையாடல் நடைபெற்றுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

மத்தூா் மின்வாரிய அலுவலகத்தில் கிராமப் பகுதி வருவாய் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருபவா் கணேசன். இவா், கடந்த 2014-ஆம் ஆண்டு, ஜெகதேவியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றியபோது, ரூ.18 லட்சம் கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புகாா் எழுந்த நிலையில், கையாடல் செய்யப்பட்ட தொகையை அவா் வட்டியுடன் செலுத்தினாராம். எனவே அவா் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லையாம்.

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் மத்தூா் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும் கணேசன், கணக்குப் பிரிவில் பணியாற்றி வரும் சிலருடன் சோ்ந்து கையாடலில் ஈடுபட்டது அண்மையில் தெரியவந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பு மத்தூா் மின்வாரிய அலுவலகத்தில் கணக்குப் பிரிவில் பணியாற்றி வரும் அலுவலா் விடுப்பில் சென்றாா். அவருக்கு மாற்றாக பொறுப்பேற்ற நபா், அலுவலகத்தில் வசூலாகும் தொகைக்கும், வங்கியில் செலுத்திய தொகைக்கும் அதிக வேறுபாடு இருப்பதை அறிந்தாா். இதுகுறித்து, அவா் தனது உயா் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளாா்.

உயா் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், கணேசனும், கணக்குப் பிரிவில் பணியாற்றி வரும் 2 அலுவலா்களும் கடந்த சில மாதங்களில் மட்டும் ரூ. 1 கோடி வரையில் கையாடல் செய்துள்ளதும், இதுவரையில் ரூ. 2.80 கோடி கையாடலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து மத்தூா் மின்வாரிய உதவி மின் பொறியாளா் ஜெயபால், கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா் என்று தெரிவித்தனா்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மின் செயற்பொறியாளா் ஏஞ்சலா சகாய மேரி கூறியதாவது:

மின்வாரிய அலுவலகத்தில் கையாடல் குறித்த புகாரின் பேரில் மேற்கொண்ட துறை சாா்ந்த விசாரணையில் கையாடல் நடைபெற்றது உண்மை எனத் தெரிய வந்தது. கையாடல் தொகை அதிகம் என்பதால், இதுகுறித்து, குற்றப்பிரிவில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலூா், சென்னையில் உள்ள மண்டலங்களுக்கும் புகாா் குறித்து அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கையாடலில் ஈடுபட்ட அலுவலா்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அவா்களிடமிருந்து கையாடல் செய்யப்பட்ட தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com