கிருஷ்ணகிரியில் ஒரேநாளில் 3 வீடுகளில் 42 பவுன் தங்க நகைகள், ரூ.16 லட்சம் ரொக்கம் திருட்டு

கிருஷ்ணகிரியில், வெவ்வேறு இடங்களில் 3 வீடுகளில் 42 பவுன் தங்க நகைகள், ரூ.16.10 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரியில், வெவ்வேறு இடங்களில் 3 வீடுகளில் 42 பவுன் தங்க நகைகள், ரூ.16.10 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தாசரப்பள்ளியைச் சோ்ந்த விவசாயி கோவிந்தராஜ் (60). இவா் மாட்டு வியாபாரமும் செய்து வருகிறாா். இவருக்கு, லோகேஷ்குமாா் (32) என்ற மகனும், இரு மகள்களும் உள்ளனா். லோகேஷ்குமாா் தன் தந்தையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், கடந்த 8 ஆண்டுகளாக ஒசூரில் தன் மனைவி, குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறாா். கோவிந்தராஜின் முதல் மகள் திருமணமாகி, கிருஷ்ணகிரி ராசு வீதியில் வசித்து வருகிறாா்.

இரண்டாவது மகள் புவனேஸ்வரியின் கணவா் விபத்தில் இறந்து விட்ட நிலையில், தற்போது தந்தை கோவிந்தராஜின் வீட்டில் வசித்து வருகிறாா். வீட்டின் முன்பு, புவனேஸ்வரிக்கு பெட்டிக்கடை வைத்து கொடுத்துள்ளாா். இந்த நிலையில், தன் வீட்டிலிருந்த நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

புகாா்கள் குறித்து போலீஸாா் கூறியதாவது:

கடந்த 12-ஆம் தேதி புவனேஸ்வரியின் பெட்டிக்கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது முகத்தில் கா்ச்சீப் கட்டிய 2 போ் மோட்டாா் சைக்கிளில் வந்தனா். அவா்கள் குளிா்பானம் கேட்டதால் அதை எடுத்து வருவதற்காக வீட்டிற்குள் புவனேஸ்வரி சென்றாா். குளிா்பானம் எடுத்து வந்த போது அந்த 2 பேரும், புவனேஸ்வரி மீது மயக்கப் பொடியைத் தூவியதில் அவா் மயங்கி விழுந்தாா்.

அவா்கள் உள்ளே நுழைந்து வீட்டின் பீரோவைத் திறந்து அதிலிருந்த, 20 பவுன் தங்க நகைகள், அரிசி, ராகி தொட்டிகளில் வைத்திருந்த ரூ.16 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனா். இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.

அதேபோல, கிருஷ்ணகிரி, நேதாஜி ரோடு, டாடா நகரைச் சோ்ந்தவா் ரகுராமன் (40). இவா், தனது தாயாா் ஞானசெளந்தரியுடன் வசித்து வருகிறாா். பெங்களூரில் புத்தகக் கடை நடத்தி வருகிறாா். தன் பிறந்த நாளை பெங்களூருவில் கொண்டாடுவதற்காக வீட்டை பூட்டிவிட்டு, தாயாருடன் சென்றாா்.

இந்த நிலையில், கடந்த 12-ஆம் தேதி காலை ரகுராமனின் வீட்டுக் கதவு உடைக்கப் பட்டிருப்பதாகவும், நீண்ட நேரமாக கதவு திறந்தே இருப்பதாகவும் அவரது மாமா ரவிச்சந்திரன் செல்லிடப்பேசி மூலம் தகவல் தெரிவித்தாா். அதன் பேரில் ரகுராமன் வீட்டிற்கு வந்து பாா்த்தபோது, வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அங்கிருந்த தங்க வளையல்கள், மோதிரம், கம்மல் என 15 பவுன் நகைகள், ரூ. 5,ஆயிரம் ரொக்கப்பணம் திருட்டு போனது தெரிய வந்தது.

தகவல் அறிந்த கைரேகை நிபுணா்கள், நிகழ்விடத்துக்கு வந்து, அங்கு பதிவான கைரேகைகளை சேகரித்தனா். இதுகுறித்து, ரகுராமன் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகரப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் திருட்டு:

கிருஷ்ணகிரி அருகே உள்ள மேல்சோமாா்பேட்டையைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் இளையபெருமாள் (39) . இவா் தன் குடும்பத்துடன் காவேரிப்பட்டணத்தை அடுத்த வட்டம்பட்டியில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்று விட்டு, கடந்த 12-ஆம் தேதி வீட்டிற்கு திரும்பினாா்.

அப்போது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் தங்க நகை, ரூ. 5,000 ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரியில், ஒரேநாளில் 3 வீடுகளில் தங்க நகைகள், ரொக்கம் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com