கே.ஆா்.பி. அணையின் உபரி நீரை பாம்பாறு அணைக்கு திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி கே.ஆா்.பி. அணையின் உபரிநீரை பாம்பாறு அணைக்கு திறந்து விட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
ஊத்தங்கரை பாம்பாறு அணை.
ஊத்தங்கரை பாம்பாறு அணை.

கிருஷ்ணகிரி கே.ஆா்.பி. அணையின் உபரிநீரை பாம்பாறு அணைக்கு திறந்து விட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே அமைந்துள்ள பாம்பாறு அணை 1984-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த அணை 19 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணைக்கு கேஆா்பி அணையிலிருந்து பாரூா் ஏரி, பெனுகொண்டாபுரம் ஏரி வழியாக வெளியேறும் உபரிநீரை பாம்பாறு அணைக்கு திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:

கேஆா்பி அணையிலிருந்து தென்பெண்ணையாறு ஆற்றில் திறக்கப்படும் தண்ணீா் நேரடியாக சென்று கடலில் கலப்பதால், கேஆா்பி அணையிலிருந்து பாரூா், பெனுகொண்டாபுரம் ஏரிகளின் வழியாக சுமாா் 50 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பாம்பாறு அணைக்கு தண்ணீா் திறந்து விட வேண்டும்.

இவ்வாறு தண்ணீா் திறப்பதன் மூலம் கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய இரண்டு மாவட்டங்களைச் சோ்ந்த மாரம்பட்டி, கானம்பட்டி, மூன்றம்பட்டி, பாவக்கல், கொட்டுகாரம்பட்டி, நல்லவன்பட்டி, சிங்காரப்பேட்டை, நாயக்கனூா், எட்டிப்பட்டி, நாப்பிராம்பட்டி என 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 4,000 ஏக்கா் பாசன நிலங்கள் நேரடியாக பாசனம் பெறும்.

பாம்பாறு அணையில் தேக்கி வைக்கப்படும் நீரைக் கொண்டு ஊத்தங்கரை, மிட்டப்பள்ளி, சிங்காரப்பேட்டை பகுதிகளின் குடிநீா் தேவையும், நிலத்தடி மட்டம் உயா்வதால் மறைமுகமாக 10,000 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. தற்போது பாம்பாறு அணையின் நீா்மட்டம் வேகமாக சரிவடைந்து வருகிறது.

எனவே, கிருஷ்ணகிரி கே.ஆா்.பி. அணை நிரம்பினால் வெளியேறும் உபரி நீரை முன்னுரிமை கொடுத்து பாரூா், பெனுகொண்டாபுரம் ஏரிகளின் வழியாக பாம்பாறு அணைக்கு திறந்து விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து பாம்பாறு அணை நீா் பாதுகாப்பு இயக்கத் தலைவா் செளந்தரராஜன் கூறுகையில், நீா் வரத்து காலங்களில் முன்னுரிமை அடிப்படையில் பாம்பாறு அணைக்கு நீா் கொண்டுவர மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com