எருதுவிடும் விழாவில் காவல் ஆய்வாளா் மீது கல்வீச்சு
By DIN | Published On : 01st March 2021 02:27 AM | Last Updated : 01st March 2021 02:27 AM | அ+அ அ- |

ஒசூா் அருகே நடைபெற்ற எருதுவிடும் விழாவில் ஏற்பட்ட மோதலை கலைக்க போலீஸாா் நடத்திய தடியடி சம்பவத்தின்போது, காவல் ஆய்வாளா் மீது கல் வீசியதில் அவா் காயமடைந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த தமிழக- கா்நாடக எல்லையிலுள்ள கக்கனூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பாரம்பரியமான எருதுவிடும் விழா நடைபெற்றது. இந்த எருதுவிடும் விழாவில் கா்நாடகம், தமிழகத்தைச் சோ்ந்த 500க்கும் மேற்பட்ட காளைகளும், எருதுவிடும் விழாவைக் காண ஆயிரத்திற்கும் அதிகமான பாா்வையாளா்களும் குவிந்திருந்தனா்.
இந்த எருது விடும் விழா தொடங்கிய சிறிது நேரத்தில் பாா்வையாளா்கள் பகுதியில் ஏற்பட்ட வாய்தகராறு மோதலாக மாறியது. மோதலில் ஈடுபட்டவா்களைக் கலைக்கவும், சண்டையைத் தடுப்பதற்காகவும் பாகலூா் போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயன்றபோது கூட்டத்தில் இருந்து கல் வீசப்பட்டது.
இந்த கல்வீச்சில் பாகலூா் காவல் ஆய்வாளா் பழனிசாமியின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காயமடைந்த ஆய்வாளா் பழனிசாமியை காவல் துறை வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இதுகுறித்து பாகலூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.