கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
By DIN | Published On : 10th March 2021 12:55 AM | Last Updated : 10th March 2021 12:55 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப். 6-ஆம் தேதி தோ்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் தோ்தல் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை(தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
அதன்படி, ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதிக்கு 408 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 408 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபேட் இயந்திரங்கள் 442-ம் அனுப்பி வைக்கப்பட்டன.
பா்கூா் தொகுதிக்கு தலா 416 வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபேட் இயந்திரங்கள் 451-ம், கிருஷ்ணகிரி தொகுதிக்கு தலா 445 வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 483 விவிபேட் இயந்திரங்களும், வேப்பனப்பள்ளி தொகுதிக்கு தலா 441 வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டு இயந்திரங்களும், விவிபேட் இயந்திரங்கள் 478-ம், ஒசூருக்கு தலா 594 வீதம் வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டு இயந்திரங்களும், விவிபேட் இயந்திரங்கள் 644-ம், தளி தொகுதிக்கு தலா 411 வீதம் வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டு இயந்திரங்களும், விவிபேட் இயந்திரங்கள் 446 என மொத்தம் தலா 2,715 வீதம் வாக்குப்பதிவு இயந்திரக்களும், கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2944 விவி பேட் இயந்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையில் சீல் வைக்கப்பட்ட அறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.