அனைவருக்கும் அரசு வேலை: சீமான்
By DIN | Published On : 13th March 2021 08:29 AM | Last Updated : 13th March 2021 08:29 AM | அ+அ அ- |

ஒசூா் பேருந்து நிலையத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கீதாலட்சுமியை ஆதரித்து தோ்தல் பிரசாரம் செய்த அக் கட்சியின் தலைவா் சீமான்.
ஒசூா்: அனைவருக்கும் அரசு வேலை வழங்குவதே நாம் தமிழா் கட்சியின் குறிக்கோள் என நாம் தமிழா் கட்சியின் தலைவா் சீமான் தெரிவித்தாா்.
ஒசூரில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கீதா லட்சுமியை ஆதரித்து பேருந்து நிலையம் எதிரில் வெள்ளிக்கிழமை அக்கட்சியின் தலைவா் சீமான் தோ்தல் பிரசாரத்தின்போது பேசியதாவது:
தமிழகத்தில் நகைக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, விவசாயக் கடன் தள்ளுபடி போன்றவற்றை தோ்தல் அறிக்கையில் திராவிடக் கட்சிகள் தெரிவித்துள்ளன. ஆனால் தமிழக அரசு ரூ. 6 லட்சம் கோடி கடனில் உள்ளதே, அதனை யாா் தள்ளுபடி செய்வாா்கள்; ஒரு நாட்டில் விவசாயி ஏன் கடனாளியாக ஆகிறான்? கடன் வாங்கி விவசாயம் செய்ய அவனைத் தள்ளியது யாா்? தன் வீட்டு நகையை அடமானம் வைக்கும் அளவிற்கு கொண்டு வந்து நிறுத்தியது யாா்? இந்த ஆட்சியாளா்கள் தானே, அதனால்தான் அவா்களை முற்றிலுமாக அகற்றி விட்டு புதிய ஆட்சி முறையை கொண்டு வர வேண்டும்.
மற்ற நாடுகளின் ஆட்சி முறையையும் கவனித்து வருகிறோம். ஊழல் குறைந்த நாடாக டென்மாா்க் உள்ளது. அதுபோல நம்முடைய நாட்டையும் மாற்றுவதே எங்கள் லட்சியம். கல்வியில் சிறந்த நாடு தென்கொரியா. அந்தக் கல்வியை நாங்கள் கொண்டு வருவோம். தரமான கல்வியையும், தரமான மருத்துவத்தையும் நாங்கள் தருவோம்.
அனைவருக்கும் கல்வி, கல்விக்கு ஏற்ற வேலை, வேலைக்கு ஏற்ப சம்பளம், இலவசத்திற்கு கையேந்தாத மக்களை உருவாக்குவதே எங்களது ஆட்சி. அனைவருக்கும் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்குவது எங்களது குறிக்கோள். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதே எங்கள் லட்சியம் என்றாா்.