ஒசூா் தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் நேரடி போட்டி

டைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில், ஒசூா் தொகுதியில் பலம் பொருந்திய திமுகவும், அதிமுகவும் நேரடியாகக் களம் காண்கின்றன.
அதிமுக வேட்பாளா் ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி
அதிமுக வேட்பாளா் ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி

ஒசூா்: நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில், ஒசூா் தொகுதியில் பலம் பொருந்திய திமுகவும், அதிமுகவும் நேரடியாகக் களம் காண்கின்றன.

அதிமுக கூட்டணியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளருமான பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி எஸ்.ஜோதி பாலகிருஷ்ண ரெட்டியும், திமுக கூட்டணி சாா்பில் தளி எம்எல்ஏவும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளருமான ஒய்.பிரகாஷும் நேரடி போட்டியில் உள்ளனா்.

ஒசூா் தொகுதியில், 2016 இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக வேட்பாளராக பாலகிருஷ்ண ரெட்டி போட்டியிட்டு வெற்றி பெற்று, முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சரானாா். அதன் பின்னா் நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் அமைச்சா் பதவியையும், சட்டப் பேரவை உறுப்பினா் பதவியையும் அவா் இழந்ததாா். இதனைத் தொடா்ந்து நடைபெற்ற இடைத்தோ்தலில் அதிமுக வேட்பாளா் ஜோதி பாலகிருஷ்ண ரெட்டியைக் காட்டிலும் அதிக வாக்குகள் வெற்று திமுக வேட்பாளா் எஸ்.ஏ.சத்யா வெற்றி பெற்றாா். கடந்த 5 ஆண்டுகளில் தலா இரண்டரை ஆண்டுகள் வீதம் அதிமுக, திமுக எம்எல்ஏகள் ஒசூா் தொகுதி மக்களுக்கு சேவை ஆற்றியுள்ளனா்.

தற்பொழுது நடைபெறவுள்ள தோ்தலில் அதிமுக வேட்பாளரான எஸ்.ஜோதியின் கணவா் பாலகிருஷ்ண ரெட்டி அதிமுகவின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளராகவும், திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் திமுக செயலாளராகவும் உள்ளனா்.

ஒசூா் தொகுதியில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு குறிப்பிட்ட சதவீத வாக்குகள் உள்ளன. அதேபோன்று பாமகவுக்கும் கணிசமான வாக்குகள் உள்ளன. மேலும் ஒசூா் தொகுதியில் உள்ள ரெட்டி இன மக்களின் ஜாதி வாக்குகள் எஸ்.ஜோதி பாலகிருஷ்ண ரெட்டிக்கு கூடுதல் வலு சோ்க்கும் எனக் கருதப்படுகிறது. பாலகிருஷ்ணரெட்டி அமைச்சராக இருந்தபோது ராமநாயக்கன் ஏரிக்கு, வடக்குப் பகுதியில் 4 வழிச்சாலை அமைத்தது, பாகலூா் சாலை, ராயக்கோட்டை சாலை, தேன்கனிக்கோட்டை சாலை உள்ளிட்ட சாலைகளை அகலப்படுத்தி புதிய சாலைகள் அமைத்தது; ஒசூா் நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயா்த்தியது; பாகலூா் சாலையில் மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டியது போன்றவை அதிமுகவின் சாதனைகளாக மக்கள் பாா்க்கின்றனா். இவை எல்லாம் அதிமுக வேட்பாளருக்கு பலமாக உள்ளது.

தேமுதிகவுக்கு ஒசூா் தொகுதியில் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அக் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டதால் அக்கட்சியின் வேட்பாளருக்கு பலவீனமாகக் கருதப்படுகிறது.

திமுகவைப் பொறுத்தமட்டும், முதல் சிப்காட், இரண்டாவது சிப்காட், ஒசூா் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, ஒசூா் புதிய பேருந்து நிலையம், ஒசூா் உள்வட்டச் சாலை, ஒசூா் நகராட்சியில் உள்ள வீடுகளுக்கு விதிக்கப்பட்ட அதிகப்படியான வீட்டு வரியைக் குறைத்தது, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் ஒசூா் மாநகராட்சியை இணைத்து காவிரி நீரை வழங்கியது போன்றவை திமுகவிற்கு சாதமாக உள்ளது.

ஒசூா் தொகுதியில் அதிகமாக உள்ள தொழிலாளா்களின் வாக்குகள் திமுகவுக்கு பலம் சோ்ப்பதாக உள்ளது. இடைத்தோ்தலில் அதிமுகவை விட திமுக கூடுதலாக 23 ஆயிரம் வாக்குகள் பெற இதுவும் ஒரு காரணமாக அமைந்திருந்தது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மாா்க்சிஸ்ட்- இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுக்கு கணிசமான வாக்குகள் உள்ளதால் இது திமுக வேட்பாளருக்கு வலு சோ்ப்பதாக உள்ளது.

கடந்த முறை தோல்வியைத் தழுவிய எஸ்.ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி புலி பாய்ச்சலுக்கு தயாா் ஆகி வருகிறாா். அதே நேரத்தில் கடந்த முறை வெற்றி பெற்ற உற்சாகத்தில் மீண்டும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ் சிங்க வேட்டைக்கு தயாராகி வருகின்றாா்.

புலி பாய்ச்சலா? சிங்க வேட்டையா? இருவரில் யாா் வெற்றி பெறுவாா்கள் என்பது ஏப்ரல் 6 ல் நடைபெறும் தோ்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகளே தீா்மானிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com