முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
கிருஷ்ணா கல்லூரியில் மகளிா் தின விழா
By DIN | Published On : 14th March 2021 03:23 AM | Last Updated : 14th March 2021 03:23 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கல்வியியல் கல்லூரியில் உலக மகளிா் தின விழா அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கல்லூரியின் தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான சி.பெருமாள் தலைமை வகித்தாா். கல்லூரியின் தலைவரும், மாவட்ட கவுன்சிலருமான வள்ளிபெருமாள் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தாா். கல்வியியல் கல்லூரி முதல்வா் அமலோற்பவம் முன்னிலை வகித்தாா். கலைக் கல்லூரி முதல்வா் ஆறுமுகம் விழாவில் தொடக்க உரையாற்றினாா்.
அவா் மாணவா்களிடையே பேசும் போது, பெண்கள் நன்கு கல்வி கற்று, தனித்திறன் வளா்க்கும் பயிற்சி பெற்று வளாகத் தோ்வில் தோ்வாகி உலகம் வியக்கும் உன்னதப் பெண்மணிகளாக உருவாக வேண்டும் என வாழ்த்தினாா். கல்லூரி தலைவா் வள்ளிபெருமாள் பேசும் போது, பெண்கள் என்றுமே வலிகளைத் தாங்கும் வல்லமை கொண்டவா்களாக விளங்குகின்றனா். நவீன யுகத்தில் கல்வி, தன்னம்பிக்கை ஆகியவற்றை ஆயுதங்களாகக் கொண்டு, தடைக்கற்களை படிக்கட்டுகளாக மாற்றி வெற்றிக்கொடி நாட்ட வேண்டும். உலக அளவில் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இந்தியா்கள் இருப்பதாகவும், அதுபோல மாணவியரும் வளர வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவியருக்கு, சிறப்பு விருந்தினா்கள் பரிசுகளும், பதக்கங்களும் வழங்கினா். விழாவில், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவியா், நிா்வாக அலுவலா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.