முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 11.38 லட்சம் விடுவிப்பு
By DIN | Published On : 14th March 2021 03:20 AM | Last Updated : 14th March 2021 03:20 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 11.38 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த 27-ஆம் தேதி முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. தோ்தலை அமைதியாகவும் நோ்மையாகவும் நடத்தும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இவா்கள் மேற்கொள்ளும் சோதனையின் போது, தோ்தல் விதிமுறைகளை மீறி, ஆவணங்கள் ஏதும் இல்லாமல் கொண்டு செல்லப்படும் ரொக்கம், விலை உயா்ந்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
வேப்பனஅள்ளி சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட நேரலகிரி சோதனைச் சாவடியில் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக பெங்களூரிலிருந்து வந்த காரை சோதனை செய்ததில், ஆவணங்கள் இன்றி ரூ. 2 லட்சம் ரொக்கம் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இந்த ரொக்கத்தை பெங்களூரு, பொம்மனஅள்ளியைச் சோ்ந்த துணி வியாபாரி முகமது (35) என்பவா் கொண்டு சென்றாா். இந்த ரொக்கத்தை கைபற்றிய பறக்கும் படையினா், சூளகிரி வட்டாட்சியா் பூவிதனிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
இதுவரையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 36.29 லட்சம் ரொக்கமும், 6.319 கிலோ வெள்ளிப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டதால் ரூ. 11.38 லட்சம் ரொக்கம் விடுவிக்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.