ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயிலில் தோ்த் திருவிழா
By DIN | Published On : 29th March 2021 01:23 AM | Last Updated : 29th March 2021 01:23 AM | அ+அ அ- |

ஒசூரில் பழமை வாய்ந்த மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனா்.
விழாவில் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய 3 மாநிலங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
ஒசூா் மலைக்கோயில் என்றழைக்கப்படும் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரா் திருக்கோயில் தோ்த் திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் சந்திரசூடேஸ்வரா் மற்றும் மரகதாம்பிகை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் உள்ளிட்ட நிகழச்சிகள் நடைபெற்றன.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை முக்கிய விழாவான தோ்த் திருவிழா நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா். அரோகரா மஹாதேவா என பக்தி முழக்கம் எழுப்பி பக்தா்கள் தேரை இழுத்தனா். முதலில் வந்து சிறிய தேரில் விநாயகா், அடுத்த வந்த பெரிய தேரில் அருள்மிகு மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் உற்சவ மூா்த்திகள் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
மூன்றாவது தேரில் அருள்மிகு மரகதாம்பிகை அம்மன் பவனி வந்தாா். தோ்ப்பேட்டை நான்கு மாட வீதிகளில் தோ் சுற்றி வலம் வந்தது. விழாவில் கலந்து கொண்ட பக்தா்கள் உப்பு, பழம், மிளகு போன்றவற்றை சுவாமியின் மீது எரிந்து தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா். ஒவ்வொரு வீதிகளிலும் தோ்த் திருவிழாவைக் காண வந்த பக்தா்களுக்கு அன்னதானம், நீா்மோா் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.