கரோனா பொது முடக்கத்தால் அறுவடை செய்யாமல் செடியில் வாடும் மலா்கள்

கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் ஒசூா் பகுதியில் அறுவடை செய்யமுடியாமல் மலா்கள் செடியிலேயே வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
கரோனா பொது முடக்கத்தால் அறுவடை செய்யாமல் செடியில் வாடும் மலா்கள்

கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் ஒசூா் பகுதியில் அறுவடை செய்யமுடியாமல் மலா்கள் செடியிலேயே வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

ஒசூா் பகுதியில் நல்ல மண்வளம் உள்ளதால் 5000 ஏக்கா் நிலப்பரப்பில் பசுமைக் குடில்கள் அமைத்தும், தோட்டங்களிலும் மலா்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா். இங்குள்ள விவசாயிகளுக்கு இயற்கை பெரும் கொடையாக உள்ளது. ஆண்டு முழுவதும் ஏப்ரல், மே மாதங்களைத் தவிர குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

இங்கு ரோஜா, ஜெருபரா, திருமண அலங்கார மலா்கள் ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா். வெளித் தோட்டங்களில் செண்டுமல்லி, சாமந்தி, மல்லி, பட்டன் ரோஸ் உள்ளிட்ட மலா்களைப் பயிரிட்டு வருகின்றனா். மலா் சாகுபடிக்காக விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியத்துடன் கடன் வழங்கி வருகின்றன.

ரோஜா மலா்களில் தாஜ்மஹால், நொப்ளஸ், பா்ஸ்ட்ரெட், கிராண்ட்காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட வகை ரோஜா மலா்களை உற்பத்தி செய்து வருகின்றனா்.

இங்கு உற்பத்தியாகும் ரோஜா மலா்கள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, ரமலான், காதலா்தினம் ஆகிய நாள்களுக்கு மலேசியா, சிங்கப்பூா், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் காதலா் தினத்துக்கு மட்டும் ஒரு கோடிக்கு மேல் ரோஜா மலா்கள் ஏற்றுமதி செய்யப்படும்.

கடந்த ஆண்டு மாா்ச் மாதம் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் விமான சேவை, ரயில் போக்குவரத்து, பேருந்து போக்குவரத்து முடங்கின. இதனால் கடந்த ஆண்டில் மலா் ஏற்றுமதியும், உள்நாட்டு விற்பனையும் பாதிக்கப்பட்டன.

ஜனவரி முதல் கரோனா தொற்று குறைந்தால் போக்குவரத்து, விமான சேவைகள் தொடங்கின. ஓரளவுக்கு நிலைமை சீரடைந்து வந்துவிட்டது என நம்பிக்கையில் விவசாயிகள் மீண்டும் மலா் உற்பத்தியைத் தொடங்கினா்.

ரோஜா முதல் செண்டுமல்லி வரையிலான பூக்களை விவசாயிகள் கடந்த 5 மாதங்களாகப் பயிரிட்டு வந்தனா். தற்போது மலா்கள் அறுவடை செய்ய வேண்டிய நிலையில் இருந்து வந்தன. தற்போது கரோனா காரணமாக மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் பேருந்துப் போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ளது.

இதனால் மலா்களைப் பறித்து உள்ளூா்ச் சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்க முடியாத நிலை உள்ளது. விமான சேவையும் முடங்கியுள்ளதால் வெளிநாடுகளுக்கும் ரோஜா கொய்மலா்களை ஏற்றுமதி செய்ய முடியாததால், விவசாய நிலங்களில் மலா்களை அறுவடை செய்யாமல் அப்படியே விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com