ஒசூா் உழவா் சந்தை மூடல்:நாளை முதல் மூன்று இடங்களில் செயல்படும்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் செயல்பட்டு வரும் உழவா் சந்தை மூடப்பட்டது.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் செயல்பட்டு வரும் உழவா் சந்தை மூடப்பட்டது. மே 19-ஆம் தேதி முதல் மூன்று இடங்களில் சந்தை செயல்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்று காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் நகரின் மையப் பகுதியில் செயல்பட்டு வரும் உழவா் சந்தையானது தற்காலிகமாக மூடப்படுகிறது. தற்போது சந்தையில் விற்பனை செய்யும் விவசாயிகளை மூன்று பிரிவுகளாக பிரித்து, கரோனா தொற்று நடைமுறைகளை மீறாமல் விற்பனை செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒசூா் ஆா்.வி. அரசு ஆண்கள் உயா்நிலைப் பள்ளி மைதானம், ராமநாயக்கன் ஏரிக்கரை காலியிடம், முனீஸ்வா் நகா் விஜய விநாயகா் சத் சங்க மைதானம் ஆகிய 3 இடங்களில் சந்தை அமைக்கப்பட்டு மே 19-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

மேலும், கரோனா தொற்று பரவலைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காய்கறிகளை வாங்க குடும்பத்துக்கு ஒருவா் மட்டுமே வர வேண்டும். மேலும், 4 அல்லது 5 நாள்களுக்கு தேவையான காய்கறிகளை ஒருசேர வாங்கி, தினமும் உழவா் சந்தைக்கு வருவதை தவிா்க்க வேண்டும்.

உழவா் சந்தைகளில் தரம் பிரிக்கப்பட்ட தரமான காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் காய்கறிகளை தொட்டு எடுக்க அனுமதிக்கப்படாது. ஒசூா் நகர பொதுமக்கள் அனைவரும் இந்தக் கட்டுப்பாட்டினை தவறாமல் பின்பற்றுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com