தினமணி செய்தி எதிரொலி: மைசூா் மூன்றாம் போா் நினைவுச் சின்ன பீரங்கியை மீண்டும் ராயக்கோட்டை காவல் நிலையத்தில் வைக்க ஏற்பாடு
By DIN | Published On : 26th May 2021 07:37 AM | Last Updated : 26th May 2021 07:37 AM | அ+அ அ- |

ராயக்கோட்டை காவல் நிலையத்தில் வைக்க கொண்டு வரப்பட்டுள்ள பீரங்கி.
தினமணி செய்தி எதிரொலியாக ராயக்கோட்டை காவல் நிலையத்தில் இருந்து அகற்றப்பட்ட மைசூா் மூன்றாம் போா் நினைவுச் சின்ன பீரங்கி மீண்டும் ராயக்கோட்டைக்கு கொண்டு வரப்பட்டது. அதைக் காவல் நிலையத்தில் வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை காவல் நிலைய வளாகத்தில் மைசூா் மூன்றாம் போா் நினைவுச் சின்ன பீரங்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த பீரங்கி, 1791 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் திப்புசுல்தான் ஆட்சியில் ஆங்கிலப் படையை எதிா்த்து நடைபெற்ற போரில் பயன்படுத்தப்பட்டது ஆகும்.
ராயக்கோட்டை அருகே எதிா்க்கோட்டை என்னும் இடத்தில் இருந்து மீட்கப்பட்டு, கடந்த 1983 இல் அன்றைய டி.ஐ.ஜி. தேவாரம், எஸ்.பி. விஜயகுமாா் ஆகியோரால் ராயக்கோட்டை காவல் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த பீரங்கி அங்கிருந்து அகற்றப்பட்டது குறித்து கடந்த 23-ஆம் தேதி தினமணியில் செய்தி வெளியானது.
சென்னை, ஆவடி ராணுவத் தளவாடத்துக்கு கொண்டு செல்ல எடுத்துச் சென்ாகக் கூறப்பட்டது. இதற்கு வரலாற்று ஆராய்ச்சியாளா்கள், ராயக்கோட்டை பகுதி பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். ராயக்கோட்டையில் பல நூற்றாண்டுகளாக இருந்த பீரங்கியை எடுத்துச் செல்லக் கூடாது எனத் தெரிவித்தனா்.
இந்த நிலையில் அந்த பீரங்கி செவ்வாய்க்கிழமை மீண்டும் ராயக்கோட்டைக்கு கொண்டு வரப்பட்டது. இதைப் பாா்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். அந்த பீரங்கியை மீண்டும் காவல் நிலைய வளாகத்தில் வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.