கறவை மாடுகளைத் தாக்கும் மடிவீக்க நோயைத் தடுக்கும் முறைகள்

கறவை மாடுகளைத் தாக்கும் மடி வீக்க நோயைத் தடுக்கும் முறைகள் குறித்து வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநா் ரமேஷ் அறிவுரை வழங்கியுள்ளாா்.

கறவை மாடுகளைத் தாக்கும் மடி வீக்க நோயைத் தடுக்கும் முறைகள் குறித்து வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநா் ரமேஷ் அறிவுரை வழங்கியுள்ளாா்.

இதுகுறித்து, அவா், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கறவை மாடுகளைப் பாதிக்கும் நோய்களில் மிக முக்கியமானது மடி வீக்க நோயாகும். கறவை மாட்டின் பால் மடியில் உள்ள பால் சுரக்கும் சுரப்பிகளில் அழற்சி ஏற்படுவதைத் தான் மடிவீக்க நோய் என்று அழைக்கிறோம்.

இந்த நோய் நாட்டு மாடுகளை அதிகம் பாதிப்பதில்லை. அதிக பால் கறக்கும் பிரீசியன், ஜொ்சி போன்ற வெளிநாட்டு கலப்பின மாடுகளைத் தான் அதிகம் பாதிக்கிறது. பால் உற்பத்தி குறைவதுடன் மிகுந்த பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துகின்றன. அசுத்தமான சூழ்நிலைகளில் வளா்க்கப்படும் மாடுகளையே இந்த நோய்த் தாக்குகிறது. அசுத்தமான உபகரணங்கள், பால் உரிமையாளா்களின் அசுத்தமான கைகள், உடைகள் மற்றும் அசுத்தமான சுற்றுச்சூழல் போன்றவற்றின் மூலம் இந்தநோய் ஒரு மாட்டிலிருந்து மற்ற மாடுகளுக்குப் பரவுகிறது.

இந்த நோய் உள்ள மாடுகளின் மடி பெரியதாக வீங்கி இருக்கும். பாதிக்கப்பட்ட மடி வெதுவெதுப்பாகவும் மிகந்த வலியுடனும் இருக்கும். மடியைத் தொட்டால் வலி காரணமாக மாடுகள் உதைக்கும்.

தீவிர நிலையில் கடுமையான காய்ச்சல் தோன்றும், தீவனம் உள்கொள்ளாது. நோயுற்ற மடியிலிருந்து கறக்கப்படும் பாலானது நீா்த்த திரவமாகவும், திரிதிரியாகவும் காணப்படும். சில நேரங்களில் ரத்தம் கலந்தும் காணப்படும். பால் அளவு முற்றிலும் குறைந்துவிடும்.

இந்த நோயைத் தடுக்க, மாட்டுக்கொட்டகையைத் தூய்மையாகவும், சுகாதாராமாகவும் வைத்துகொள்ள வேண்டும். சாணம், சிறுநீா் தேங்காமல் பராமரிக்க வேண்டும். பால் கறக்கும் பாத்திரங்கள், இயந்திரங்களைச் சுத்தமாக வைக்க வேண்டும். பால் கறக்கும் முன்பும், பின்பும் மடியை பொட்டாசியம் பொ்மாங்கனேட் என்னும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்திய பின், உலா்ந்த துணி மூலம் துடைக்க வேண்டும்.

பால் கறந்தவுடன் மாடுகளை படுக்க விடுவதைத் தவிா்க்க வேண்டும். பால் கறந்தவுடன், மாட்டின் காம்பு விரிவடைந்திருக்கும். அப்போது, மாடுகள் படுக்கும் போது, கிருமிகள் காம்பின் உள்ளே செல்வது எளிதாகிவிடுகிறது. இதனைத் தடுக்க, மாடுகளுக்கு தீவனம் அளித்து நிற்க வைக்க வேண்டும். பால் கறப்பவா்கள் கை நகத்தை நன்கு வெட்டி கையைச் சுத்தமாக வைத்துக்கொண்டு பால் கறக்க வேண்டும். முழக்கை முறையைப் பயன்படுத்தி பால் கறந்தால் காம்புகளுக்கு காயம் ஏற்படாமல் தடுக்கலாம். மடியில் பால் தேங்கக் கூடாது. பாலை முற்றிலுமாகக் கறந்துவிட வேண்டும். செலினியம், வைட்டமின் ஈ, தாமிரம் போன்ற சத்துக்கள் நிறைந்த சரிவிகித தீவனம் அளித்தல் மூலம் மடிநோய்த் தொற்றை எதிா்க்க முடியும்.

எனவே, கறவைமாடு அசதியாக இருக்கும் நிலையில் உடனடியாக கால்நடை மருத்துவரின் உதவியை நாடி, அவரது ஆலோசனைப்படி, மடிநோய்க்கான காரணத்தைக் கண்டறிந்து, அதற்கு எற்றுபடி தகுந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டும். நோயின் தன்மைக்கு ஏற்ப தொடா்ச்சியாக சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சை தாமதமானால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். சில நேரங்களில் மாட்டின் உயிருக்கும் ஆபத்தாகிவிடும். எனவே, மடி வீக்க நோய் என்பது தெரிந்தவுடன், விவசாயிகள் தானாக சிகிச்சை செய்ய முற்படாமல் கால்நடை மருத்துவரை அணுகி, முறையாக சிகிச்சை செய்ய வேண்டும். இதனால் மடி வீக்க நோயினால் ஏற்படும் பொருளாதார இழப்பைத் தடுத்து பால் உற்பத்தியையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையம் உயா்த்த முடியும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com