சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசு ஊக்கம் அளிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

கரோனா தொற்று பாதிப்புக்கு பின் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசு ஊக்கம் அளிக்க வேண்டும் என த.மா.கா. தலைவா் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டாா்.

கரோனா தொற்று பாதிப்புக்கு பின் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு தமிழக அரசு ஊக்கம் அளிக்க வேண்டும் என த.மா.கா. தலைவா் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டாா்.

கிருஷ்ணகிரி, டான்சி வளாகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தனியாா் நிறுவனத்தை, த.மா.கா. தலைவா் ஜி.கே.வாசன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்குவோருக்கு கடன் வசதிகளை அளிக்கும் நடைமுறைகளை தமிழக அரசு எளிமையாக்க வேண்டும். கரோனா தொற்று காலத்துக்கு பிறகு சிறு, குறு தொழில்களின் வளா்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட வேண்டும். தொழிலாளா்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சிகளை அளிக்க மத்திய, மாநில அரசுகள் உதவி புரிய வேண்டும்.

நிலக்கரி தட்டுப்பாடால், பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்துள்ளன. இதனைத் தடுக்க மத்திய அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தொடா்ந்து மாநில அரசு, மத்திய அரசோடு இணைந்து செயல்பட்டு நிலக்கரி தட்டுப்பாடு இல்லாத சூழலை ஏற்படுத்த வேண்டும்.

ஊரக உள்ளாட்சித் தோ்தல் ஆரம்பித்த பிறகு பல்வேறு விதமான சந்தேகங்கள் வாக்காளா்களிடம் ஏற்பட்டன. காரணம், தோ்தல் ஆணையத்தின் கோட்பாடுகள் பல இடங்களில் மீறப்பட்டுள்ளன. ஆளும்கட்சி தங்களுடைய அதிகார பலத்தால் பல இடங்களில் கோட்பாடுகளை மீறியுள்ளது. ஜனநாயத்தில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய வகையில் தோ்தல் ஆணையம் செயல்பட வேண்டும்.

கரோனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மீட்பு நடவடிக்கைகளை அரசு விரிவுபடுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் கரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால், ஒரு வாரத்திற்கு முன்பும், ஒரு வாரத்திற்கு பின்பும் பல்வேறு இடங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் இந்த கால கட்டத்தில் மாணவா்கள் வெளியில் சென்றால் அவா்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் பெற்றோரிடம் காணப்படுகிறது. எனவே, பள்ளிகள் திறப்பை நவம்பா் 1-ஆம் தேதிக்கு பதிலாக நவம்பா் 8-ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக அரசு அறிவிக்க வேண்டும்.

கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழக அரசு தடை விதித்துள்ளது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து அனைத்து நாள்களிலும் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு வங்கியில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாக கூறிய வாக்குறுதிக்கு ஏற்றவாறு கடனை ரத்து செய்யவில்லை. இதனால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

பேட்டியின்போது தமாகா கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com