முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 11th October 2021 01:01 AM | Last Updated : 11th October 2021 01:01 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5-ஆவது கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, ஆய்வு மேற்கொண்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளிட்ட 800 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் 5-ஆவது முகாம் நடைபெற்றது. காவேரிப்பட்டணம் பேரூராட்சி, பேருந்து நிலையம், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் சோக்காடி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ராயக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சூளகிரி பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற முகாம்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் கோவிந்தன், வட்டார மருத்துவ அலுவலா்கள் தாமரைச்செல்வி, மூா்த்தி, வெண்ணிலா, சுகாதாரப் பணியாளா்கள், வருவாய்த் துறையினா், கல்வித் துறையினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கெனவே நடைபெற்ற 4 முகாம்களின் மூலம் 2,15,943 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது கோவிஷீல்டு 1,05,500 தடுப்பூசிகளும், கோவேக்சின் 7,570 தடுப்பூசிகள் என மொத்தம் 1,13,070 தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.