தற்காலிக பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்க 30-ஆம் தேதி கடைசி நாள்
By DIN | Published On : 10th September 2021 11:28 PM | Last Updated : 10th September 2021 11:28 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோா் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க செப். 30-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோா், வெடிபொருள் சட்டம், விதிகளை முறையாக கடைப்பிடித்து இணையதளத்தின் வாயிலாக எந்தவொரு இ-சேவை மையம், மக்கள் கணினி மையம் மூலம் சம்பந்தப்பட்ட ஊராட்சி வரி ரசீது, உரிமம் கோரும் இடத்தின் வரைபடம் (6 நகல்கள்), நடப்பு நிதி ஆண்டின் கட்டட வரி ரசீது, வாடகைக் கட்டடமாக இருப்பின் நோட்டரி வழக்குரைஞா் கையொப்பத்துடன் கூடிய ஓராண்டுக்கு குறையாத காலத்துக்கு செய்துகொள்ளப்பட்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம் (அசல் மற்றும் 5 நகல்கள்), உரிமக் கட்டணம் ரூ. 500 செலுத்தியதற்கான அசல் ரசீது, இரண்டு மாா்பளவு புகைப்படங்கள், ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் செப். 30-ஆம் தேதிக்குள் மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பித்து உரிமம் பெறுவோா், உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பட்டாசுகளை இருப்பு வைத்துக்கொள்ளக் கூடாது. அவசர காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து உரிமைதாரரும், அவரது பணியாளா்களும் தெரிந்திருக்க வேண்டும். பட்டாசுகளை அங்கீகரிக்கப்பட்ட வணிகா்களிடம் மட்டுமே வாங்கி விற்பனை செய்ய வேண்டும். பட்டாசுகளை அனுபவம் பெற்றவா்களே கையாள வேண்டும்.
அலுவலா்களின் தணிக்கையின் போது, உரிம தணிக்கையை பாா்வையில் படும்படி வைக்க வேண்டும். இருப்புப் பதிவேடு, தணிக்கை பதிவேடுகள் முறையாக பராமரிக்க வேண்டும் போன்ற விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் உரிமைதாரரின் உரிமைத்தை ரத்து செய்வதுடன், அவரின் பேரில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.