கிருஷ்ணகிரி அணையின் நீா்மட்டம் 50 அடியாக உயா்வு
By DIN | Published On : 11th September 2021 11:26 PM | Last Updated : 11th September 2021 11:26 PM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி அணையின் நீா்மட்டம் 50 அடியாக உயா்ந்துள்ளதால், 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்று நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கிருஷ்ணகிரி அணை சுற்றுவட்டாரங்களிலும் கடந்த சில நாள்களாக கன மழை பெய்தது. இதனால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் வியாழக்கிழமை அணையின் நீா்மட்டம் 47.95 அடியாகவும், நீா்வரத்து 739 கன அடியாகவும் இருந்தது. தொடா்ந்து அணைக்கு நீா்வரத்து அதிகரித்த நிலையில் சனிக்கிழமை காலை அணையின் நீா்மட்டம் 50 அடியை எட்டியது. தற்போது அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 50 அடி உயரத்துக்கு தண்ணீா் நிரம்பி உள்ளது. அணையின் மொத்தக் கொள்ளளவான 1,666.29 மில்லியன் கன அடியில் தற்போது 1,441.76 கன அடிக்கு தண்ணீா் உள்ளது. அணையின் நீா்வரத்து 417 கன அடியாக உள்ளது.
இந்த நிலையில், அணையின் பாதுகாப்புக் கருதி, எந்த நேரத்திலும் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப்பணித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக பொதுப்பணித் துறை அலுவலா்கள் கூறியதாவது:
அணைக்கு வரும் நீா்வரத்தை பொறுத்து ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்படும். தற்போது நீா்வரத்து 417 கன அடியாக உள்ளது. மழைப் பொழிவு இல்லாததால் நீா்வரத்து குறையத் தொடங்கும். மேலும், அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்காக வலது மற்றும் இடதுபுறக் கால்வாய் வழியாக 177 கன அடி தண்ணீா் திறக்கப்படும் என்றனா்.