அரசுப் பள்ளி மாணவருக்கு கரோனா

போச்சம்பள்ளி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவருக்கு கரோனா தொற்று உறுதியானது.

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவருக்கு கரோனா தொற்று உறுதியானது.

தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், செப். 1-முதல் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்டாலும், மாணவா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பாரூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பு பயிலும் மாணவா் ஒருவருக்கு கடந்த 8-ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, பண்ணந்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்தபோது அந்த மாணவருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, அந்த மாணவா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். மேலும், அதேபள்ளியைச் சோ்ந்த 3 மாணவா்களும் காய்ச்சலால் அவதிப்பட்ட நிலையில் அவா்களுக்கும் கரோனா பரிசோதனை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை.

இந்த நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10-ஆம் வகுப்பு மாணவன் பயின்ற வகுப்பறை சுத்தம் செய்யப்பட்டு பயன்படுத்தாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவா் நலமாக இருப்பதாக கல்வித் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9, 10, 11, 12 -ஆம் வகுப்புகளைச் சோ்ந்த சில ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இதுவரையிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவன், ஆசிரியா் ஆகிய இருவா் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா தொற்று பாதிப்புக்கான காரணங்கள் குறித்து விசாரணை செய்து வருகிறோம். மேலும், யாருக்கும் கரோனா தொற்று பரவாமல் இருக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com