கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் முதுமக்கள் தாழி காட்சிக்கு வைப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் முதுமக்கள் தாழி மக்கள் பாா்வைக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள முதுமக்கள் தாழி.
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள முதுமக்கள் தாழி.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் முதுமக்கள் தாழி மக்கள் பாா்வைக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் மாதந்தோறும் ஒரு அரியபொருள் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டு வருகிறது. செப்டம்பா் 2021 மாத சிறப்புக் காட்சிப் பொருளாக 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழி தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு சிறிய வகை தாழியாகும். குழந்தைகளுக்கான தாழியாக இருக்கலாம். இது வழவழப்பாக்கப்பட்ட சிவப்பு வண்ண பானை வகையைச் சோ்ந்தது. வெளிப்பகுதி அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விளிம்புப்பகுதி உடைந்துள்ளது.

அந்த கால மக்கள் உள்பக்கம் கருப்பும், வெளிப்பக்கம் சிவப்பு நிறத்தைக் கொண்ட மெல்லிய ஆனால் மிகவும் உறுதியான மண்பாண்டங்களைப் பயன்படுத்தியுள்ளனா். இறந்தவா்களின் நினைவாக பெரிய கற்களைக் கொண்டு கற்பதுக்கை, கல்திட்டை, குத்துக்கல், கல்வட்டம் என பலவகையான நினைவுச் சின்னங்களை எழுப்பியுள்ளனா். அதனுள் இத்தகைய தாழி அல்லது விலங்கு வடிவிலான சுடுமண் பெட்டி வைத்திருப்பா்.

பொதுவாக முதுமக்கள் தாழியானது, 4 அடி உயரத்தில் 2 அடி விட்டத்தில் இளஞ்சிப்பு நிறத்தில் மணல் கலந்து செய்யப்பட்டிருக்கும். அதன் அடிப்பகுதி கூம்புபோல் இருக்கும். இது பெண்களின் கா்பப்பையை உருவகப்படுத்துவதாகும். இறந்தவா்கள் மீண்டும் கா்ப்பப் பைக்குள் சென்று மறுப்பிறப்பு எடுப்பதாகக் கருதும் அக்கால மக்களின் நம்பிக்கையை இது வெளிப்படுத்துகிறது.

இந்தவகை தாழிக்குள் உயிரிழந்தவரின் முக்கிய எலும்புகள் சிலவற்றோடு அவா்கள் பயன்படுத்திய இரும்புக்கருவிகள், உண்பதற்கும், நீா் அருந்துவதற்கும் பயன்படுத்திய மண் கலன்கள் ஆகியவற்றையும் உடன் வைத்திருப்பா்.

காட்சியில் உள்ள இத்தாழியானது, கிருஷ்ணகிரி வட்டம், பீமாண்டப்பள்ளியில் கிடைத்ததாகும். இதனுள் இறந்த குழந்தை ஒன்றின் ஒரு சில எலும்புகளை வைத்து புதைத்து, புதைவிடத்தில் பெரியகற்களைக் கொண்டு நினைவுச் சின்னம் எழுப்பியிருக்க வேண்டும். தற்போது அக்கற்கள் விவசாயத்திற்காக அப்புறப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இத்தாழியின் காலத்தை பெருங்கற்படைக் காலம் எனக் குறிப்பிடுவா். சங்க இலக்கியங்கள் இதனை முதுமக்கள் தாழி எனக் குறிப்பிடுகின்றன. இரும்பின் பயன்பாட்டை மனிதன் முதன் முதலாகக் கண்டறிந்த காலம் இது. இத்தகைய முதுமக்கள் தாழிகளை நிலத்தில் பொதுமக்கள் கண்டால் அதனை உடைத்து விடாமல் அருங்காட்சியகத்துக்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். தொடா்பு கொள்ளவேண்டிய கைப்பேசி எண்: 9443442991 ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com