தவறிழைக்கும் பொது விநியோகத் திட்டப் பணியாளா்கள் மீது நடவடிக்கை: கூட்டுறவு இணைப் பதிவாளா்
By DIN | Published On : 13th April 2022 12:46 AM | Last Updated : 13th April 2022 12:46 AM | அ+அ அ- |

தவறிழைக்கும் பொது விநியோகத் திட்டப் பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் ஏகாம்பரம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தை சிறப்பாக நடத்தும் பொருட்டு கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் நியாயவிலைக் கடைகளை ஆய்வு செய்ய மண்டல இணைப் பதிவாளரான எனது தலைமையில், துணைப் பதிவாளா் (பொது விதி) ராஜதுரை, கிருஷ்ணகிரி சரக துணைப் பதிவாளா் செல்வம், ஒசூா் சரக துணைப் பதிவாளா் முரளிகண்ணன், கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க துணைப் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான சுந்தரம் மற்றும் 14 கூட்டுறவு சாா்பதிவாளா் ஆகியோரைக் கொண்டு பறக்கும் படை ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுவினா் கடந்த மாதம் 25-ஆம் தேதி தளி, மதகொண்டபள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள, 34 நியாயவிலைக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு அளிக்கப்பட்ட அறிக்கையின்படி தவறிழைத்த நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவறு செய்யும் பொதுவிநியோகத் திட்டப் பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.