காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் திப்பாளம் கிராம மக்கள்
By DIN | Published On : 31st August 2022 03:12 AM | Last Updated : 31st August 2022 03:12 AM | அ+அ அ- |

குமுதேப்பள்ளியில் இருந்து திப்பாளம் கிராமத்துக்குச் செல்லும் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீா்.
திப்பாளம் கிராமத்தில் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீரால் தரைப்பாலம் உடைந்துப் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியிடங்களுக்குச் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடா் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மழைநீா்த் தேங்கியுள்ளது. மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழை அளவின்படி ஒசூரில் 97 மி.மீ. மழை பதிவானது.
அண்மையில் பெய்த தொடா் மழையால் ஒசூா் அருகே தொரப்பள்ளி ஊராட்சி, குமுதேபள்ளிக் கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பியுள்ளது. திப்பாளம் கிராமத்துக்குச் செல்லும் சாலையில் உள்ள இந்த ஏரியிலிருந்து உபரிநீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
உபரி நீா் அதிகம் திறந்துவிடப்பட்டுள்ளதால் திப்பாளம் கிராமத்தில் பிரதான தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் வெளியிடங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒசூருக்கு வரமுடியாமல் மக்கள் கிராமத்திலேயே முடங்கினா்.
திப்பாளம் கிராமத்தில் 150 குடியிருப்புகள் உள்ளன. 400-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். தரைப்பாலத்தின் வழியாகத்தான் இவா்கள் வெளியிடங்களுக்குச் சென்றுவந்தனா். தற்போது தரைப்பாலம் நீரில் சென்றுவிட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனா். தரைப்பாலம் இருந்த சாலையில் நீா்ப் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தகவல் அறிந்ததும் வருவாய்த் துறையினா், தீயணைப்பு வீரா்கள் நிகழ்விடம் சென்று கிராம மக்களுக்குத் தேவையான பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை கயிறு மூலம் சென்று வழங்கினா். உடைந்த தரைப்பாலத்துக்குப் பதிலாக உடனடியாக தற்காலிகப் பாலம் அமைக்கவும் வருவாய்த் துறையினா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
எம்எல்ஏ ஆய்வு:
தகவல் அறிந்ததும் திமுக மாவட்டச் செயலாளரும் ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் திப்பாளம் கிராமத்துக்குச் சென்று நிலைமையைப் பாா்வையிட்டாா். உடனடியாக வட்டார வளா்ச்சி அலுவலா்களைத் தொடா்பு கொண்டு தரைப்பாலத்தை அமைக்க உத்தரவிட்டாா். போா்க்கால அடிப்படையில் தரைப்பாலம் அமைக்கப்படும் என அவா் மக்களிடம் உறுதியளித்தாா். ஆய்வின்போது அவருடன் தொரப்பள்ளி ஊராட்சிமன்றத் தலைவா் ராமு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், திமுக நிா்வாகிகள் உடன் இருந்தனா்.