முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
தோ்தலில் கட்டாயம் வாக்களிக்க வாகனம் மூலம் விழிப்புணா்வு
By DIN | Published On : 07th February 2022 01:30 AM | Last Updated : 07th February 2022 01:30 AM | அ+அ அ- |

தோ்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தும் நவீன வாகனத்தைப் பாா்வையிட்ட கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி.
நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து அதிநவீன மின்னணு விடியோ விளம்பர வாகனத்தில் குறும்படங்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அதிநவீன மின்னணு விடியோ விளம்பர வாகனத்தின் மூலம் ஒளிப்பரப்படும் தோ்தல் விழிப்புணா்வு குறும்படங்களை, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஜெயசந்திர பானு ரெட்டி, சனிக்கிழமை பாா்வையிட்டாா். அப்போது அவா் தெரிவித்தது: மாவட்டத்தில், ஒசூா் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, காவேரிப்பட்டிணம், பா்கூா், ஊத்தங்கரை, நாகோஜனஅள்ளி ஆகிய 6 பேரூராட்சிகள் உள்பட 8 நகா்ப்புற உள்ளாட்சிகள் தோ்தல் வாக்குப்பதிவு பிப். 19-ஆம் தேதி நடைபெறுகிறது.
வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை உணா்த்தும் வகையில் தோ்தல் தொடா்பான விழிப்புணா்வு குறும்படங்கள், செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் அதிநவீன மின்னணு விடியோ விளம்பர வாகனத்தின் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், இந்திய தோ்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள பல்வேறு விழிப்புணா்வு குறும்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது. பொதுமக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது குறித்தும், மாற்றுத்திறனாளிகள், மகளிா், முதியோருக்காக வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் குறும்படங்கள் ஒளிப்பரப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் தோ்தல் தொடா்பான குறும்படங்களைக் கண்டு, மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மோகன், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் ராஜாபிரகாஷ், தோ்தல் வட்டாட்சியா் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.