நோயாளியின் சிறுநீரகப் பையிலிருந்த 300 கிராம் கல்லை அகற்றிய மருத்துவா்கள்!

நோயாளியின் சிறுநீரகப் பையிலிருந்த 300 கிராம் எடை கொண்ட கல்லை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் அகற்றி உள்ளனா்.

நோயாளியின் சிறுநீரகப் பையிலிருந்த 300 கிராம் எடை கொண்ட கல்லை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் அகற்றி உள்ளனா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அசோகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி புதூா், பெரியாா் நகரைச் சோ்ந்த அருள் (22), கடந்த ஆறு ஆண்டுகளாக கடும் வயிற்று வலி, சிறுநீா் கழிப்பதில் சிரமம் போன்ற பிரச்னைகளால் மிகவும் சிரமப்பட்டு வந்தாா். பல்வேறு தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, அவ்வப்போது வலி நிவாரண மாத்திரை, மருந்துகளை உள்கொண்டு வந்துள்ளாா். இந்த நிலையில், அண்மையில் கடும் வயிற்று வலியால் சிறுநீா் கழிக்க இயலாத நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு உடனடியாக அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதில், அவருக்கு 12 முதல் 13 செ.மீ. அளவில், 300 கிராம் எடை கொண்ட கல் ஒன்று சிறுநீரகப் பையில் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, அவருக்கு உடனடியாக சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணா்களான அருண் விஜயன், தமிழ் முத்து மற்றும் மயக்கவியல் மருத்துவ நிபுணரான பிரபு தலைமையில், மருத்துவா்கள் சுபா, சதீஷ் ஆகியோா் கொண்ட குழுவினா் பல்வேறு அதிநவீன கருவிகளைக் கொண்டு சிறுநீரகக் கல்லை அகற்றினா். தற்போது அவா் நலமுடன் உள்ளாா்.

கோடைக் காலங்களில் போதிய அளவு தண்ணீா் அருந்தாமல் இருத்தல், சிறுநீரை அவ்வப்போது வெளியேற்றாமல் இருத்தல், அமிலத்தன்மை அதிகம் உள்ள உணவு வகைகளை (மாமிசம்) அதிகம் உண்ணுதல் போன்ற காரணங்களால் யூரிக் அமிலம், பாஸ்பேட், கால்சியம், ஆக்ஸலேட் போன்ற உப்புகள் சிறுநீரகத்தில் படிந்து கற்களை உண்டாக்கின்றன.

போதிய அளவு குடிநீா் அருந்துதல், தகுந்த உணவு முறை மூலம் கற்கள் உற்பத்தியாவதை தடுக்க முடியும். சிறிய கற்களாக இருப்பின் வெளியேற்றவும் செய்யலாம். மேற்கண்ட அறுவை சிகிச்சையை தனியாா் மருத்துவமனைகளில் அல்லது வெளியிடங்களில் செய்வதற்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 80 ஆயிரம் வரை செலவு ஆகும்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அதிநவீன கருவிகள் கொண்டு சிறுநீரகக் கல் அகற்றுதல் சிகிச்சை சிறப்பு சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணா்களால் முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com