முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
ஏரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்பு
By DIN | Published On : 19th March 2022 12:01 AM | Last Updated : 19th March 2022 12:01 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டி ஏரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டோா்.
கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டி ஏரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மீட்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் பல்வேறு நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகளை பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வா்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமா்வு விசாரித்தது. உயா் நீதிமன்ற உத்தரவின்படி, தமிழக தலைமைச் செயலாளா் தாக்கல் செய்த அறிக்கையில், நீா்நிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானப்பட்டி ஏரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு, 54 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள், பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து நீா்வள ஆதாரத்துறை செயற்பொறியாளா் குமாா் கூறியதாவது:
அவதானப்பட்டி ஏரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தவா்களுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், தற்போது ஆக்கிரமிப்புகளை நாங்களே அகற்றி, ஏரியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள 75 சென்ட் நிலத்தை மீட்டுள்ளோம். இதேபோல மாவட்டத்தில் பையூா், சின்னகவுண்டனூா், மிட்டஅள்ளி, கொல்லப்பள்ளி ஏரி ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படவுள்ளன என்றாா்.