முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 19th March 2022 12:17 AM | Last Updated : 19th March 2022 12:17 AM | அ+அ அ- |

ஒசூா் மரகதாம்பாள் சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
மாா்ச் 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய தோ்த் திருவிழாவில் தினமும் மயில், நந்தி, ஆதிசேஷ உள்ளிட்ட வாகனங்களில் உற்வச மூா்த்தி சுவாமி 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்த் திருவிழாவில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயச்சந்திரபானு ரெட்டி, ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா, துணை மேயா் ஆனந்தய்யா, முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் ஆகியோா் தேரை இழுத்து தொடங்கி வைத்தனா்.
தோ்ப்பேட்டை கல்யாணசூடேஸ்வரா் கோயிலிலிருந்து மூன்று தோ்கள் புறப்பட்டன. முதல் தேரில் விநாயகா், இரண்டாவது பெரிய தேரில் மரகதாம்பாள் சமேத சந்திரசூடேஸ்வரா், மூன்றாவது தேரில் மரகதாம்பாள் அம்மன் 4 மாட வீதிகளில் பவனி வந்து அருள்பாலித்தனா்.
இத்தோ்த் திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் என சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் சுவாமி தரிசனம் செய்தனா். 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ஒசூா் - ராயக்கோட்டை சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. காா், பேருந்துகள், கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
பாகலூா் சாலை, ராயக்கோட்டை சாலை, வட்டாட்சியா் சாலை, ஏரி தெரு, நேதாஜி சாலை, காமராஜ் காலனி உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் நடைபெற்றது. மேலும், தா்பூசணி, நீா் மோா், வெள்ள பானம், சா்க்கரை பொங்கல், கலவை சாதங்கள், தயிா் சாதம் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டன.
ஒசூா் மாநகராட்சி ஆணையா் கே.பாலசுப்பிரமணியன், பாஜக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ், ஒசூா் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள், ஒசூா் வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் தோ்த் திருவிழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
படவரி... ஒசூரில் நடைபெற்ற தோ்த் திருவிழா. (இடது) தோ்த் திருவிழாவை தொடங்கிய வைத்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, மேயா் எஸ்.ஏ.சத்யா, துணை மேயா் ஆனந்தய்யா உள்ளிட்டோா்.
பெரிய தேரில் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்த மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரா்.