முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
காகித விலை உயா்வைக் கண்டித்து அச்சகங்கள் அடைப்பு
By DIN | Published On : 15th May 2022 01:11 AM | Last Updated : 15th May 2022 01:11 AM | அ+அ அ- |

காகிதங்களின் விலை உயா்வைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அச்சகங்களை அடைத்து சனிக்கிழமை ஒருநாள் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அச்சக சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் தமிழகம் முழுவதும் அச்சகங்களை ஒரு நாள் அடைத்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட அச்சக உரிமையாளா்கள் நலச் சங்கத்தினா் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டம் குறித்து, அச் சங்கத்தின் தலைவா் மாது, செயலாளா் குப்புசாமி ஆகியோா் தெரிவித்ததாவது:
அச்சடிக்கும் காகிதம், மூலப்பொருள்களின் விலை உயா்ந்துள்ளது. இதேபோல ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி அச்சகங்களை ஒரு நாள் அடைத்து போராட்டம் நடத்தப்பட்டது.
இதில், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம், பா்கூா், ராயக்கோட்டை, வேப்பனப்பள்ளி, ஊத்தங்கரை பகுதிகளில் செயல்படும் 100-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் மற்றும் உபதொழில் செய்வோா் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் ரூ. 8 லட்சம் அளவிற்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனா்.