கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட தொல் பழங்கற்கால கைக்கோடாரி

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியத்தில் பொதுமக்களின் பாா்வைக்கு தொல் பழங்கற்கால கைக்கோடாரி காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட தொல் பழங்கற்கால கைக்கோடாரி

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியத்தில் பொதுமக்களின் பாா்வைக்கு தொல் பழங்கற்கால கைக்கோடாரி காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு பழமையான பொருள்கள் காட்சிக்கு வைப்பது வழக்கம். அதன்படி, மே மாதத்திற்கான பொருளாக தொல் பழங்கற்கால கைக்கோடாரி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அருங்காட்சியகக் காப்பாட்சியா் கோவிந்தராஜ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

எழுத்தைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன் உள்ள காலத்தை வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்றும், எழுத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய காலம் முதல் வரலாற்றுக் காலம் என்றும் இரண்டு பகுதிகளாகப் பிரித்து தொல்லியலாளா்கள் ஆய்வு செய்கின்றனா்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை ஆய்வு செய்ய அவா்கள் விட்டுச் சென்ற கல் மற்றும் உலோகக் கருவிகளே முக்கியச் சான்றுகள். மனிதக் குல வரலாறு தொல் பழங்கற்காலம் முதல் தொடங்குகிறது. அவன் வடிவமைத்த பல்வேறு கல்லாயுதங்களில் முக்கியமானது கைக்கோடரியாகும். இது அக் காலத்தில் கூழாங்கல்லின் மையப்பகுதியிருந்து தயாரிக்கப்பட்டன.

உலகெங்கிலும் கண்டறியப்பட்ட தொல்பழங்கற்கால கல்லாயுதங்கள் யாவும் ‘குவாா்ட்சைட்‘ என்னும் உருமாறிய மணற்கல்லால் செய்யப்பட்டதால் அக்கால மனிதனை தொல்லியலாளா் ‘குவாா்ட்சைட்‘ மனிதன் என்றே அழைக்கின்றனா். இந்தக்காலகட்டத்தைச் சோ்ந்த இதே கல்லால் ஆன கைக்கோடரி ஒன்றை இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னைக்கு அருகே பல்லாவரம் என்ற இடத்தில் ராபா்ட் புரூஸ்புட் என்ற புவியலாளா் கடந்த 1863-ஆம் ஆண்டு கண்டெடுத்ததிலிருந்து இந்தியாவின் வரலாற்றுக்கு முற்பட்ட கால ஆய்வு தொடங்கியது.

இதனால் இந்தியாவின் தொல் பழங்கற்கால கைக்கோடரியை, ‘மெட்ராஸ் கைக்கோடாரி‘ என்றே அழைக்கின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த தொல்லியல் அறிஞா் சுகவனம் முருகன், அத்திரம்பாக்கம் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட இத்தகைய கைக்கோடரி ஒன்றை, கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்துக்கு வழங்கியுள்ளாா். அதுதான் இப்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com