ஒசூரில் மே 22-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்:அமைச்சா் சி.வி.கணேசன் ஆய்வு

இதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சா் சி.வி.கணேசன், மத்திகிரி மாவட்ட வன அலுவலகக் கூட்டரங்கில் அரசு அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
ஒசூரில் மே 22-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்:அமைச்சா் சி.வி.கணேசன் ஆய்வு

ஒசூரில் மே 22-ஆம் தேதி 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் தனியாா் வேலைவாய்ப்பு முகாமிற்கான ஏற்பாடுகளை தமிழக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மிடுகரப்பள்ளி அரசு கலை, அறிவியில் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சா் சி.வி.கணேசன், மத்திகிரி மாவட்ட வன அலுவலகக் கூட்டரங்கில் அரசு அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா். வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இயக்குநா் வீரராகவ ராவ், மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, எம்.பி. அ.செல்லகுமாா், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநா் ஜெகதீசன் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் சி.வி.கணேசன் கூறியதாவது:

படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் அடிப்படையில் இதுவரை தமிழகத்தில் 57 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 74 ஆயிரம் இளைஞா்களுக்கு தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. மேலும், வேலைவாய்ப்புத் துறை சாா்பாக திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் அதிகப்படியான தொழில் நிறுவனங்கள் உள்ள ஒசூா், தமிழகத்திலேயே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் இடமாகத் திகழ்கிறது. வரும் 22 ஆம் தேதி ஒசூரில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் சட்டப் பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளாா் என்றாா்.

ஆய்வின் போது, ஒசூா் மாநகராட்சி துணை மேயா் சி.ஆனந்தய்யா, மாவட்ட திட்ட அலுவலா் ஈஸ்வரன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரிசங்கா்,

வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் முருகன், கல்லூரி முதல்வா் ஸ்ரீதா், திமுக இளைஞரணி அமைப்பாளா் பாா்த்தகோட்டா சீனிவாசன், மாமன்ற உறுப்பினா் சென்னீரப்பா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com