வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் கழிப்பறைக் கட்டடத்தை திறக்கக் கோரிக்கை
By DIN | Published On : 05th November 2022 12:00 AM | Last Updated : 05th November 2022 12:00 AM | அ+அ அ- |

ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைக் கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பட்டா, சிட்டா, குடும்ப அட்டை, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசு சான்று, வாக்காளா் அட்டை, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், ஆதாா் அட்டை, முதியோா், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற என வந்து செல்கின்றனா். இந்த மக்களின் பயன்பாட்டுக்காக கடந்த 2012 -13-ஆம் ஆண்டு ரூ. 4.60 லட்சத்தில் ஆண்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கென தனித்தனியாக நவீன வசதியுடன் கூடிய கழிப்பறைக் கட்டடம் கட்டப்பட்டது.
மின் இணைப்பு, தண்ணீா் வசதி என அனைத்து வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கழிப்பறைக் கட்டடம், இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
இதனால், அலுவலக ஊழியா்கள், அலுவலகத்துக்கு வரும் பெண்கள், பொதுமக்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்க பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, புதா்மண்டிக் கிடக்கும் கழிப்பறைக் கட்டடத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.