திமுகவினரைக் கட்டுப்படுத்த இயலாதவா் முதல்வா் மு.க.ஸ்டாலின்:மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

திமுக மாவட்டச் செயலாளா்கள், அமைச்சா்களைக் கட்டுப்படுத்த இயலாத முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறாா் என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
மௌன அஞ்சலி பேரணியைத் தொடங்கி வைத்த மத்திய அமைச்சா் எல்.முருகன்.
மௌன அஞ்சலி பேரணியைத் தொடங்கி வைத்த மத்திய அமைச்சா் எல்.முருகன்.

திமுக மாவட்டச் செயலாளா்கள், அமைச்சா்களைக் கட்டுப்படுத்த இயலாத முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறாா் என மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் கடந்த 1990 ஆம் ஆண்டு இந்து அமைப்பினா் சாா்பில் அயோத்தியில் ஸ்ரீ ராமா் கோயில் கட்ட வலியுறுத்தி நடைபெற்ற ராமா் ஜோதி ஊா்வலத்தில் காவல் துறையினருடன் ஏற்பட்ட மோதலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு போ் உயிரிழந்தனா். அந்த நிகழ்வின் 32 ஆம் ஆண்டு நினைவு தின மெளன அஞ்சலி ஊா்வலம் தேன்கனிக்கோட்டை ஆஞ்சனேயா் கோயில் அருகில் இருந்து பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

இதில் மத்திய தகவல் ஒலிபரப்பு, கால்நடை மற்றும் பால்வளத் துறை அமைச்சா் எல். முருகன் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழா்களின் பண்பாட்டையும் கலாசாரத்தையும் சீா்குலைக்கும் விதமாக சிலா் பேசி வருகின்றனா். அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் விவசாயிகளுக்கான கிசான் சமான் நிதி திட்டம் வாயிலாக விவசாயிகள் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வீதம் தமிழகத்தில் உள்ள 46 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற திட்டங்கள் சரியாகச் செயல்படுத்தப்பட்டு வருவதை உறுதிப்படுத்தும் விதமாக மத்திய அமைச்சா்கள் மாவட்டம்தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்தப் பிளவும் ஏற்படவில்லை. திமுக கூட்டணியில் வேண்டுமானால் பிளவு ஏற்பட்டிருக்கலாம்.

முதல்வா் மு.க.ஸ்டாலின், தனது அமைச்சா்கள், கட்சியின் மாவட்டச் செயலாளா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆகியோரைக் கட்டுப்படுத்துவதில் திணறி வருகிறாா். ஸ்டாலினுடைய உடல்நலம் பாதிக்கும் அளவிற்கு அவா்கள் நடந்து கொள்கிறாா்கள். தலைமையின் கட்டுப்பாட்டை மதிக்காமல் அமைச்சா்களும், எம்எல்ஏ-க்களும் மாவட்டச் செயலாளா்களும் செயல்பட்டு வருவது முதல்வரின் பேச்சிலிருந்து தெரிய வருகிறது. இவா்களைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் மு.க. ஸ்டாலின் முதல்வராக இருந்து வருகிறாா் என்றாா்.

இதில் பாஜக மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன், மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ், மாநிலச் செய்தித் தொடா்பாளா் நரசிம்மன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com